டெல்லி : நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடி விவகாரத்தில் அரசு அதன் தீவிரத்தன்மையை புரிந்து கொண்டு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், இந்த விவகாரத்தை பூதாகரமாக்கி வீண் சண்டை சச்சரவுகளை நாடாளுமன்றத்தில் ஏற்படுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட வேண்டாம் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பிரதமர் மோடி, நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி வலி மிகுந்தது என்றும் வருத்தத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டியது என்றும் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் கூட்டு மனப்பான்மையுடன் தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், சண்டை சச்சரவுகளில் ஈடுபடுவதை அனைவரும் தவிர்க்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் உண்மை கண்டறியும் குழு விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் அதேநேரத்தில் அதற்கு இணையாக என்ன காரணத்திற்காக இந்த சம்பவம் அரங்கேறியது அதன் பின்னால் இருப்பவர்களின் பின்னணி மற்றும் அவர்களின் நோக்கம் என்ன என்பது குறித்தும் ஆராய வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
இரண்டு பேர் பாரவையாளர்கள் பகுதியில் இருந்து எம்.பிக்கள் இருப்பிடத்திற்குள் நுழைந்தது குறித்து சபாநாயகரும் அனைத்து தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர்க மாநிலங்கள் மிகவும் பரீட்சயம் இல்லாத தலைவர்கள் முதலமைச்சர்களாக தேர்வு செய்யப்பட்டு இருப்பது கூறித்த கேள்விக்கு பதிலளித்த பிரதமர் மோடி, அந்த தலைவர்களுக்கு அதிகளவிலான அனுபவங்கள் இருப்பதாகவும், அவர்களுக்கு பின்னால் கடின உழைப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.
370வது சட்டப்பிரிவு மீதான உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசிய பிரதமர் மோடி, 370வது சட்டப் பிரிவை ரத்து செய்ததில் உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வெளியிட்டு உள்ளதாகவும், பிரபஞ்சத்தில் உள்ள எந்த சக்தியாலும் அதை மீண்டும் கொண்டு வர முடியாது என்றும் கூறினார்.
5 மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் அபாரமான வெற்றியை மேற்கோள் காட்டி பேசிய பிரதமர் மோடி, 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் ஒரு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெறும் என்பதை இது காட்டுவதாக கூறினார். அதேநேரம் எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை மக்கள் ஏன் ஏற்கவில்லை என்பதை அவர்கள் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க : கூடுகிறது காங்கிரஸ் செயற்குழு! மத்திய பிரதேசத்தை தொடர்ந்து மற்ற மாநிலங்களில் தலைவர்கள் மாற்றமா? 2024 தேர்தல் ஆலோசனையா?