டெல்லி: இதுகுறித்து பிரதமர் அலுவலரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், டெல்லியில் உச்ச நீதிமன்றத்தில் நாளை (நவம்பர் 26) நடைபெறவுள்ள அரசியல் சாசன தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். 1949ஆம் ஆண்டு இந்திய அரசியல் சாசனத்தை அரசியல் நிர்ணய சபை ஏற்றுக் கொண்டதைக் குறிக்கும் வகையில், 2015ஆம் ஆண்டு முதல் இந்த நாள் அரசியலமைப்பு தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் , மின்னணு நீதிமன்ற திட்டத்தின் கீழ் பல்வேறு புதிய முன்முயற்சிகளை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
இந்தத் திட்டம், நீதிமன்றங்களின் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப செயலாக்கத்தின் மூலம் வழக்குத் தொடுப்பவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதித்துறைக்கு சேவைகளை வழங்குவதற்கான முன்முயற்சியாகும். நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களை தெரிவிக்கும் விர்ச்சுவல் ஜஸ்டிஸ் க்ளாக், நீதிமன்ற மேலாண்மையை விளக்கும் ஜஸ்டிஸ் மொபைல் செயலி 2.0, டிஜிட்டல் நீதிமன்றம், பாதுகாப்பான இணையதள சேவைகள் போன்றவை பிரதமரால் தொடங்கப்படவுள்ள முன் முயற்சிகளில் அடங்கும்.
இது தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், தீர்வு காணப்பட்ட வழக்குகள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களை நாள்/வாரம்/மாதம் அடிப்படையில் நீதிமன்ற அளவில் வழங்குகிறது. நீதிமன்றத்தின் வழக்குத் தீர்ப்பின் நிலையைப் பொதுமக்களுடன் பகிர்ந்துகொள்வதன் மூலம் நீதிமன்றங்களின் செயல்பாட்டைப் பொறுப்புணர்வுடனும், வெளிப்படைத் தன்மையுடனும் மாற்றுவதற்கான முயற்சியாகும். இது மாவட்ட நீதிமன்றத்தின் இணையதளத்தில் உள்ள எந்தவொரு நீதிமன்றத்தின் இந்த விவரங்களை பொதுமக்கள் அணுகலாம். காகிதமில்லாத நீதிமன்றங்களுக்கு மாறுவதற்கு, நீதிமன்ற பதிவுகளை டிஜிட்டல் வடிவில் நீதிபதிக்குக் கிடைக்கச் செய்வதற்கான ஒரு முன்முயற்சியே டிஜிட்டல் நீதிமன்றம் என்பதாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புதிய ஸ்மார்ட்போன் வாங்க ஐஜியின் சர்வீஸ் ரிவால்வரை திருடிய பணியாளர்