டெல்லி: மேற்கு வங்க மாநிலம் சாந்திநிகேதனில் அமைந்துள்ள விஸ்வ-பாரதி பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா இன்று நடைபெறுகிறது. இதில், காணொலி வாயிலாகப் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி காலை 11 மணியளவில் உரையாற்றுகிறார்.
இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, "குருதேவ் ரவீந்திரநாத் தாகூருடன் நெருக்கமான தொடர்புடைய நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுவதற்கு ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்த விழாவில் மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தங்கர், மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
நூற்றாண்டு பாரம்பரியம் மிக்க நாட்டின் முக்கியக் கல்வி நிறுவனங்களுள் ஒன்றான விஸ்வ-பாரதி பல்கலைக்கழகம் 1921ஆம் ஆண்டு குருதேவ் ரவீந்திரநாத் தாகூரால் நிறுவப்பட்டது. 1951ஆம் ஆண்டு மே மாதம் விஸ்வ-பாரதி பல்கலைக்கழகத்தை மத்திய பல்கலைக்கழகமாகவும், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாகவும் நாடாளுமன்றச் சட்டத்தின்கீழ், மத்திய அரசு அறிவித்தது.
பிரதமர் நரேந்திர மோடி இந்த நூற்றாண்டு பழையான சிறப்புமிக்க பல்கலைக்கழகத்தின் வேந்தராக உள்ளார் என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரஜினி மக்கள் மன்றம் உறுப்பினர்கள் சேர்க்கையில் மோசடி - பரபரப்பு குற்றச்சாட்டு