உத்தரப் பிரதேசத்தின் சித்தார்த் நகரில் நடைபெற்ற நிகழ்வில் ஒன்பது மருத்துவக் கல்லூரிகளைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்த ஒன்பது மருத்துவக் கல்லூரிகள் சித்தார்த் நகர், இட்டா, ஹர்தோய், பிரதாப்கட், ஃபதேபூர் , தியோரியா, காசிப்பூர், மீர்சாப்பூர், ஜான்பூர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ளன.
இந்நிகழ்வில் உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்துகொண்டனர். திட்டப்பணிகளைத் தொடங்கிவைத்தப்பின் உரையாற்றிய பிரதமர் மோடி, "நாடும், உத்தரப்பிரதேசமும் கண்டுள்ள இந்த முன்னேற்றம் என்பது ஏராளமான கர்ம யோகிகளின் கடின உழைப்பின் விளைவுதான்.
சித்தார்த் நகரின் புதிய மருத்துவக் கல்லூரிக்கு மாதவ் பாபு பெயர் சூட்டப்பட்டிருப்பது அவரது சேவைக்கு உண்மையான அஞ்சலியாகும். கல்லூரி படிப்பு முடித்து வெளியே வரும் இளம் மருத்துவர்களுக்கு மக்கள் சேவை செய்வதற்கான ஊக்கம் அளிப்பதாக மாதவ் பாபுவின் பெயர் திகழும்.
இந்த ஒன்பது புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டிருப்தின் மூலம் சுமார் இரண்டாயிரத்து ஐநூறு புதிய படுக்கைகள், ஐந்தாயிரத்திற்கும் அதிகமான மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்களுக்குப் புதிதாக வேளைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
முந்தைய அரசுகளால் ஏற்பட்ட மூளைக்காய்சசல் காரணமான சோகமான உயிரிழப்புகளால் பூர்வாஞ்சலின் புகழ் கெடுக்கப்பட்டது. அதே பூர்வாஞ்சல், அதே உத்தரப் பிரதேசம் இந்தியாவின் கிழக்குப்பகுதிக்கு ஆரோக்கியத்தின் புதிய ஒளிக்கீற்றை வழங்கப்போகின்றன.
அரசு உணர்வுபூர்வமாக இருக்கும் போது, ஏழைகளின் வலியைப் புரிந்து கொள்ள மனதில் இரக்க உணர்வு ஏற்படும். இதன் பின், நல்ல செயல்பாடுகள் நடைபெறும். 2014-க்கு முன் நமது நாட்டில் மருத்துவ இடங்கள் 90,000-க்கும் குறைவாக இருந்தன. கடந்த 7 ஆண்டுகளில் 60,000 புதிய மருத்துவ இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன" என்றார்.
இதையும் படிங்க: இட ஒதுக்கீடு விவகாரத்தில் முதுகலை நீட் கவுன்சிலிங் நிறுத்திவைப்பு