அகமதாபாத்: நாட்டில் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களை ஊக்குவிக்கும் வகையில், குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் மத்திய மாநில அறிவியல் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. புதிய கண்டுபிடிப்புகள், புதிய தொழில்களில் ஈடுபடுவோருக்கு வசதிகளை ஏற்படுத்தித் தரவும், அதற்கான சூழலை மத்திய மாநில அரசுகள் இணைந்து ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்த மாநாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எஸ்டிஐ (STI - science, technology, and innovation) விஷன் 2047, சுகாதாரம் - அனைவருக்கும் டிஜிட்டல் சுகாதார வசதி, 2030க்குள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் தனியார் துறை முதலீட்டை இருமடங்கு ஆக்குதல், வேளாண்மை- விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளின் பங்கு, தூய்மையான குடிநீர் தயாரிப்பதற்கான புதிய கண்டுபிடிப்பு, அனைவருக்கும் தூய எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு கருப்பொருட்களை கொண்டு இந்த மாநாட்டின் அமர்வுகள் நடைபெறவுள்ளன.
இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டை இன்று(செப்.10) பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, அறிவியல் அடிப்படையிலான வளர்ச்சியை நோக்கி மத்திய அரசு முன்னேறி வருகிறது என்றும், 2014ஆம் ஆண்டிலிருந்து அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முதலீடு அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்தார். உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில் கடந்த 2015ஆம் ஆண்டில் 81ஆவது இடத்தில் இருந்த இந்தியா, மத்திய அரசின் முயற்சியால் 46வது இடத்திற்கு முன்னேறியுள்ளது என்று பெருமிதம் தெரிவித்தார். நாட்டில் உள்ள விஞ்ஞானிகளை ஊக்குவிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஒருவர் செயல்திறன் மிக்கவராக திகழ புத்தகங்களை மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும்