டெல்லி: ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக டெல்லி வந்து உள்ளார். காலை 8 மணிக்கு டெல்லி வந்த ஜப்பான் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவை சந்தித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பின் போது, இந்தியா - ஜப்பான் இடையிலான அமைதி, பாதுகாப்பு, நிலையான மற்றும் அமைதியான கரோனாவுக்கு பிந்தைய சூழல், தொழில்நுட்பம், பிராந்திய ஒருமைப்பாடு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஜி20 அமைப்பின் நடப்பாண்டுக்கான தலைமையை இந்தியா ஏற்றுக் கொண்டது போல், ஜி7 அமைப்பிற்கான தலைமையை ஜப்பான் ஏற்றுக் கொண்டு உள்ளது. இந்தக் கூட்டத்தின் தலைமைக்கான முன்னுரிமைகள், இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக மத்திய வெலியுறவு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, உயர் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளின் முன்னெடுப்புகள் குறித்தும் பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "பிரதமர்கள் மோடி, மற்றும் புமியோ கிஷிடா ஆகியொர் இந்தியா - ஜப்பான் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது, அமைதியான, நிலையான மற்றும் வளமான கரோனாவுக்கு பிந்தைய சூழலை உருவாக்குவது, இரு நாட்டு கூட்டுறவை மேலும் விரிவுபடுத்துவது குறித்து ஆலோசனை நடத்தியதாக" தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க: அம்ரித் பால் சிங் கைது? - பஞ்சாப் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் - என்ன நடந்தது?