டெல்லி: நாட்டின் 75வது சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில் 75 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கி அலகுகள் (Digital Banking Units-DBUs) ஏற்படுத்தப்படும் என 2022-23 மத்திய பட்ஜெட் உரையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். அதன்படி, பிரதமர் நரேந்திர மோடி இன்று(அக்.16) டிஜிட்டல் வங்கி அலகுகளை காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "டிஜிட்டல் வங்கி அலகுகள், மக்களுக்கு சேமிப்புக் கணக்குகளைத் திறப்பு, பாஸ்புக் அச்சிடுதல், நிதி பரிமாற்றம், முதலீடு போன்ற பல்வேறு வங்கி சேவைகளை வழங்கும். இவை வங்கிகளின் திட்டங்கள் மற்றும் சேவைகளை ஆண்டு முழுவதும் குறைந்த செலவில் எளிமையான அணுகுமுறையுடன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும்.
டிஜிட்டல் பேங்கிங்கின் பலன்கள் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கையும் சென்றடைவதை உறுதி செய்வதற்காகவே இந்த வங்கி அலகுகள் தொடங்கப்பட்டுள்ளன. 11 பொதுத்துறை வங்கிகள், 12 தனியார் வங்கிகள் மற்றும் ஒரு சிறு நிதி வங்கி ஆகியவை இந்த திட்டத்தில் பங்கேற்கின்றன. இந்த வங்கிகள், டிஜிட்டல் வங்கி சேவைகள், இணைய பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும். இங்கு வழங்கப்படும் சேவைகள் மற்றும் வர்த்தகத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் குறைகளை நேரடியாகவோ, ஆன்லைன் மூலமாகவோ உடனடியாக நிவர்த்தி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளளது.