தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு கடந்த மாதம் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்ட 75 வாக்கு எண்ணும் மையங்களில் இன்று(மே.2) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுவருகிறது.
தற்போதைய நிலவரப்படி, திமுக கூட்டணி 86 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. 71 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக கூட்டணி 34 இடங்களில் வெற்றியும், 43 இடங்களில் முன்னிலையிலும் உள்ளது. ஆட்சி அமைத்திட தேவையான பெரும்பான்மையை திமுக கூட்டணி கைப்பற்றிவிட்டதால், அண்ணா அறிவாலயத்தில் கொண்டாட்டம் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு, பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற திமுகவுக்கும் அதன் தலைவர் ஸ்டாலினுக்கும் வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன். மாநிலத்தின் விருப்பங்களை நிறைவேற்றவும் கரோனா பெருந்தொற்றை தோற்கடிப்பதற்காகவும் நாட்டின் முன்னேற்றத்திற்காகவம் ஒருங்கிணைந்து பணியாற்றுவோம்.
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவளித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி. மாநிலத்தின் நலனுக்காகவும் போற்றத்தக்க தமிழ் கலாசாரத்திற்கு மேலும் பெருமை சேர்க்கவும் தொடர்ந்து பணியாற்றுவேன் என உறுதி கூறுகிறேன். கடினமாக உழைத்த கட்சி நிர்வாகிகளை மெச்சுகிறேன்" என பதிவிட்டுள்ளார்.