கொச்சி: இந்திய கடற்படையின் தற்காப்பு, தாக்குதல், வலிமைக்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கிப் போர்க்கப்பல் ஐஏசி (Indigenous Aircraft Carrier) விக்ராந்த். இந்த கப்பலை தயாரிக்க 2003ஆம் ஆண்டு அனுமதி வழங்கப்பட்டது. ரூ.23 ஆயிரம் கோடி மதிப்பிலான கட்டுமான பணிகள் கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்று முடிந்தது.
மொத்தமாக 14 தளங்களைக் கொண்டுள்ள இந்தக் கப்பலின் எடை 40 ஆயிரம் டன். நீளம் 262 மீ, அகலம் 62 மீ, உயரம் 59 மீ, 2,300-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. 1,700 ராணுவ வீரர்கள் தங்கலாம். பெண் அலுவலர்களுக்குச் சிறப்பு அறைகள் உள்ளன.
இந்த கப்பலின் அதிகபட்ச வேகம் 28 நாட்ஸ் (ஒரு நாட் என்பது 1.15 கி.மீ.). பயண வேகம் 18 நாட்ஸ், 7,500 மைல்கள் வரை நிற்காமல் செல்லும் திறன்கொண்டது. ஒரு சிறிய மிதக்கும் நகரமாக காட்சியளிக்கும் இக்கப்பலில், இரு கால்பந்து மைதானங்களின் அளவுக்கு விமானங்களை நிறுத்தும் இடம் உள்ளது.
1971 நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போரின்போது, சிறப்பாக பங்காற்றிய இந்தியாவின் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலின் பெயரையே, தற்போது இந்தியாவில் முழுமையாக வடிவமைக்கப்பட்ட இந்த போர்க்கப்பலுக்கும் சூட்டியுள்ளனர். நூறுக்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்ட உள்நாட்டு உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களைக் கொண்டு இக்கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது.
விக்ராந்த் இயக்கப்படுவதன் மூலம் இனி இந்தியாவில் இரண்டு விமானம் தாங்கி கப்பல்கள் செயல்படும். இது நாட்டின் கடல் பாதுகாப்பை மேம்படுத்தும். இந்நிலையில், விக்ராந்த் போர்க்கப்பலை பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப். 2) நாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்த விழா கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கொச்சின் கப்பல் கட்டும் தள நிறுவனத்தில் நடைபெற்றது.
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் கீழ் உள்ள பொதுத்துறை கப்பல் கட்டும் நிறுவனமான கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் மூலம் இந்த கப்பலின் கட்டுமானப்பணிகள் நடைபெற்றது. இந்தியாவின் கடல்சார் வரலாற்றில் இதுவரை கட்டப்பட்டதிலேயே மிகப்பெரிய கப்பலாக விக்ராந்த் உள்ளது. இதன்பின்னர் அனைத்து போர் கப்பல்களும் உள்நாட்டின் மூலமே உருவாக்கப்பட உள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:ஒரே நாளில் 800 விமானங்கள் ரத்து... 1,30,000 பயணிகள் பாதிப்பு...