பாரீஸ் : இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக பிரான்ஸ்க்கு பிரதமர் மோடி சென்று உள்ளார். தலைநகர் பாரீஸ் சென்ற பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள விரிப்பு மரியாதை வழங்கப்பட்டது. பிரான்ஸ் தேசிய தின விழாவில் கலந்து கொள்ளும் பிரதமர், அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து பிரதமர் மோடி தன் ட்விட்டர் பக்கத்தில், "பாரீசில் தரையிறங்கி ஆயிற்று. இந்த சுற்றுப்பயணம் பிரான்ஸ் - இந்தியா இடையிலான ஒத்துழைப்பை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு செல்லும். பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு இடையே இந்திய வம்சாவெளியினரை சந்தித்து கலந்துரையாட உள்ளேன்" என்று பதிவிட்டு உள்ளார்.
பாரீஸ் விமான நிலையத்தில் தரையிறங்கிய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதாகவும் பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்னே பிரதமர் மோடியை வரவேற்றதாகவும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
மேலும், பாரிசில் நடைபெறும் பிரான்ஸ் தேசிய தினமான பாஸ்டில் தின கொண்டாட்டங்களில் பங்கேற்பது, பிரெஞ்சு அதிபர் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மற்றும் அதிகாரிகள், இந்திய வம்சாவெளியினர், பல்வேறு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டு உள்ள ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக, இந்த சுற்றுப்பயணம் இந்தியா - பிரான்ஸ் இடையிலான இருதரப்பு உறவுகளுக்கு உத்வேகம் அளிக்கும் என நம்புவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடனான பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசனை நடத்துவது முக்கிய அம்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்தியா - பிரான்ஸ் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மையை நீடித்து கொண்டு செல்வது குறித்து உரையாட உள்ளதாகவும் பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
முன்னதாக, பிரான்ஸ் தேசிய தினமான பாஸ்டில் தின அணிவகுப்பில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இந்திய ராணுவத்தை சேர்ந்த 269 வீரர்கள் இந்த பாஸ்டில் தின அணிவகுப்பில் கலந்து கொள்கின்றனர். மேலும் இந்திய விமானப் படையைச் சேர்ந்த மூன்று ரபேல் போர் விமானங்களும் பாஸ்டில் தின அணிவகுப்பில் சாதனை நிகழ்த்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பாரீஸ் நகரில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபிக்கு ஜூலை 15ஆம் தேதி அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி செல்கிறார்.
இதையும் படிங்க : தமிழில் அறிமுகமாகும் கூகுள் ஏஐ பார்ட்... 40 மொழிகளில் அறிமுகம் !