தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவை பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைகின்றது. இந்நிலையில், ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் மார்ச் முதல் வாரத்தில் வெளியிட வாய்ப்புள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
அஸ்ஸாம் மாநிலம் சிலாபதரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட மோடி, "2016ஆம் ஆண்டு, அஸ்ஸாம் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி மார்ச் 4ஆம் தேதி வெளியிடப்பட்டது. இம்முறை, தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இது தேர்தல் ஆணையத்தின் பணி.
தேர்தல் நெருங்கவுள்ள நிலையில், அஸ்ஸாம், மேற்குவங்கம், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு செல்ல, முடிந்த அளவுக்கு முயற்சி எடுப்பேன்" என்றார். ஏற்கனவே, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஐந்து மாநிலங்களுக்கு சென்று பல்வேறு அரசியல் கட்சி பிரதிநிதிகள், மாநில உயர் மட்ட அலுவலர்கள் ஆகியோரிடம் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.