இந்தியாவில் கரோனா பரவல் அதிகரித்தபோது, அதனைக் கட்டுபடுத்துவதற்காகப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தது.
அதில் ஒன்றாக 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பிஎம் கேர்ஸ் என்ற திட்டத்தைப் பிரதமர் மோடி தொடங்கினார். இதன்வாயிலாகப் பல்வேறு தனியார் நிறுவனங்கள், அரசு ஊழியர்கள் எனப் பல அமைப்பினர்கள் நன்கொடை அளித்தனர்.
இதையடுத்து பிஎம் கேர்ஸில் இருந்து திரட்டப்பட்ட நிதி அரசாங்கத்தின் நிதி அல்ல எனவும், இது தொடர்பான பல சந்தேகங்களை, எதிர்க்கட்சியினர், பல்வேறு தரப்பினர் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.
பிஎம் கேர்ஸ் குறித்து வழக்கு
இந்நிலையில் சம்யக் அகர்வால் என்பவர் பிஎம் கேர்ஸ் குறித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அதனை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், இதுகுறித்து ஒன்றிய அரசு பதில் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதனைத்தொடர்ந்து மற்றொரு மனுதாரர் தாக்கல் செய்த மனுவில், “பிஎம் கேர்ஸ் நிதியத்தை அரசாங்க அமைப்பாக அறிவிக்க வேண்டும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்ட விவரங்களை வழங்க மத்திய பொது தகவல் அலுவலர் மறுத்துவிட்டார். ஆதலால், அரசாங்க அமைப்பாக பிஎம் கேர்ஸை அறிவிக்க வேண்டும்” எனக் கோரியிருந்தார்.
இவ்விரண்டு மனுவும் இன்று (செப்.23) டெல்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.என்.பாட்டீல், நீதிபதி அமித் பன்சால் முன் விசாரனைக்கு வந்தது.
அப்போது பிஎம் கேர்ஸ் நிதி குறித்து பிரதமர் அலுவலகத்தின் இணைச் செயலர் பிரதீப் குமார் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது, “பிஎம் கேர்ஸ் செயல்பாடுகள் வெளிப்படைத் தன்மையாகவும், மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கைத் துறையின் அறிவுரையின் பெயரில் தணிக்கையாளர் மூலமே தணிக்கை செய்யப்படுகிறது.
வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய, பிஎம் கேர்ஸ் அறக்கட்டளை இணையதளத்தில் தணிக்கை அறிக்கையும், நிதி பெறப்பட்ட விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
அரசாங்கத்தின் நிதி அல்ல
பிஎம் கேர்ஸ் திட்டமானது, அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு உருவாக்கப்படவில்லை. பிஎம் கேர்ஸ் நிதி அரசாங்கத்தின் நிதியும் அல்ல. தாமாக முன்வந்து அளிக்கும் தனிநபர், நிறுவனங்காளின் நன்கொடை மட்டுமே. ஒன்றிய அரசுக்கும், இந்த நிதிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.
இதனை மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கையால் தணிக்க செய்யவும் முடியாது. தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களை பெற பிஎம் கேர்ஸ் நிதி பொது அமைப்பும் அல்ல.
ஆகையால், தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும். அறக்கட்டளையின் செயல்பாடுகளை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மத்திய அரசோ அல்லது மாநில அரசோ கட்டுப்படுத்தாது.
நன்கொடைகள் அனைத்தும் ஆன்லைன் மூலமும், காசோலை மூலமும், வரைவோலை மூலமும் மட்டுமே பெறப்படுகிறது. தணிக்கை செய்யப்பட்ட அறிக்கையும், செலவுகளும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன'' என்றார்.