டெல்லியில் நடைபெற்ற 90ஆவது இன்டர்போல் பொதுச்சபையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பிரதமர் கூறுகையில், இன்டர்போல் வரலாற்றுச் சிறப்புமிக்க மைல் கல்லை எட்டவிருக்கிறது. 2023ஆம் ஆண்டில் அதன் 100ஆவது நிறுவக ஆண்டினை கொண்டாடவிருக்கிறது. இந்த தருணம் மகிழ்ச்சிக்குரியது. இன்டர்போல் என்ற கோட்பாடு இந்திய தத்துவத்தின் பல்வேறு அம்சங்களின் தொடர்பை கொண்டுள்ளது. இன்டர்போலின் குறிக்கோள் என்பது பாதுகாப்பான உலகத்திற்கு காவல்துறையை இணைப்பதாகும்.
உலகம் முழுவதும் உள்ள காவல் படைகள் மக்களை மட்டும் பாதுகாக்கவில்லை சமூக நலனையும் பாதுகாக்கின்றன. எந்த நெருக்கடியிலும், சமூகத்தில் பொறுப்பேற்க முன்னணியில் நிற்கின்றன. கோவிட் -19, பெருந்தொற்றுக் காலத்தில் இது கண்கூடாக வெளிப்பட்டது. உலகமே ஸ்தம்பித்தாலும், அதன் பாதுகாப்பை நிலைநிறுத்தும் பொறுப்பை கைவிட்டு விடமுடியாது. இந்திய காவல் துறை கூட்டமைப்பு நிலையிலும், மாநில நிலையிலும் உள்ளது. 900-க்கும் அதிகமான தேசிய சட்டங்களையும், சுமார் 10,000 மாநில சட்டங்களையும், அமலாக்குவதில் ஒத்துழைத்து செயல்படுகிறது.
இந்திய சமூகம் பன்முகத்தன்மை கொண்டதாக உள்ளது. உலகின் அனைத்து பெரிய சமயங்களைச் சேர்ந்த மக்களும் இங்கே வாழ்கிறார்கள். நூற்றுக்கணக்கான மொழிகளும் பேச்சு வழக்கு மொழிகளும் உள்ளன. லட்சக்கணக்கான பக்தர்களை ஈர்க்கும்வகையில், ஏராளமான விழாக்கள் நடைபெறுகின்றன. உதாராணமாக கும்பமேளா என்பது உலகிலேயே மிகப் பெரிய நீண்டகாலம் நடைபெறுகிற ஆன்மீக விழாவாகும். இதில் 240 மில்லியன் யாத்ரீகர்கள் திரள்கிறார்கள். இந்த நிலையிலும் நமது காவல்படைகள் பன்முகத்தன்மைக்கு மதிப்பளித்தும் அரசியல் சட்டம் உறுதி செய்துள்ள மக்களின் உரிமைகளை மதித்தும் செயல்படுகின்றன.
அவர்கள் மக்களை மட்டும் பாதுகாக்கவில்லை நமது ஜனநாயகத்திற்கும் சேவை செய்கிறார்கள். இந்தியாவின் சுதந்திரமான, நியாயமான, பேரளவிலான தேர்தல்களை எடுத்துக் கொள்ளுங்கள். தேர்தல்களில் சுமார் 900 மில்லியன் வாக்காளர்களுக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டியுள்ளது. இந்த எண்ணிக்கை வடக்கு மற்றும் தெற்கு அமெரிக்க கண்டங்களின் இணைந்த மக்கள் தொகைக்கு நிகரானது. தேர்தலுக்கு உதவி செய்ய 2.3 மில்லியன் காவல் துறையினர் ஈடுபடுத்தப்படுகின்றனர். பன்முகத்தன்மையையும், ஜனநாயகத்தையும் நிலை நிறுத்துவதில் உலகத்திற்கு இந்தியா ஆய்வுப் பொருளாக விளங்குகிறது.
பல நாடுகளிலின் பயங்கரவாதத்தை இந்தியா பல தசாப்தங்களாக முறியடித்து வருகிறது. இந்த விஷயத்தில் உலகம் விழித்துக் கொள்வதற்கு முன்பாகவே, பாதுகாப்பு மற்றும் பந்தோபஸ்தின் சிரமத்தை நாங்கள் அறிந்திருந்தோம். இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். ஆனால், பயங்கரவாதம் என்பது வெளிப்பகுதிகளில் மட்டுமே போரிடவில்லை. தற்போது இணையம் வழியிலான பயங்கரவாதமும் கணினி வழியிலான அச்சுறுத்தல்களும் பரவி வருகின்றன. ஒரு பொத்தானை அமுக்குவதன் மூலம் தாக்குதலை நிறைவேற்ற முடிகிறது.
கணினிகளை செயலிழக்கச் செய்யமுடிகிறது. இவற்றுக்கு எதிராக உத்திகளை வகுக்க ஒவ்வொரு நாடும் முயற்சி செய்கிறது. ஆனால், நமது எல்லைகளுக்குள் செய்வது போதுமானதாக இல்லை. கூடுதலாக சர்வதேச அளவில், உத்திகளை உருவாக்கும் அவசியம் உள்ளது. முன்கூட்டியே கண்டறிதல், எச்சரிக்கை செய்தல், ஆகியவற்றை செயல்படுத்துவதோடு போக்குவரத்து சேவைகளை தொடர்பு கட்டமைப்பை, முக்கியமான அடிப்படை கட்டமைப்பை பாதுகாப்பது, தொழில்நுட்ப உதவியை பெறுவது. புலனாய்வு தகவலை பரிமாறிக் கொள்வது ஆகியவையும் தேவைப்படுகிறது எனத் தெரிவித்தார். இந்த நிகழ்வில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்டர்போல் தலைவர் அகமது நாசர் அல் ரெய்சி, இன்டர்போல் தலைமைச் செயலாளர் ஜுர்கென் ஸ்டாக், சிபிஐ இயக்குநர் சுபோத் குமார் ஜெய்ஸ்வால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: நானும் காரசாரமான ஆளுதான்… தனிமனித விமர்சனம் வேண்டாம் என பவன் கல்யாண் எச்சரிக்கை