சென்னை: ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த விஸ்வநாதன் (42) என்பவர் குண்டூர் பகுதியில் நகைக்கடை வைத்துள்ளார். அதே பகுதியில் கிரண் என்பவரும் நகைக்கடை நடத்தி வருகிறார். விஸ்வநாதன், கிரண் இருவரும் தங்களிடம் பணிபுரியும் ஊழியர்களான அலிகான் (25), சுபானி (25) ஆகியோரிடம் பணம் கொடுத்து சென்னை சவுக்கார்பேட்டைக்குச் சென்று நகைகளை வாங்கி வரும்படி கூறியுள்ளனர்.
அதன்படி, விஸ்வநாதனிடமிருந்து அலிகான் என்பவர் 68 லட்சம் ரூபாயும், கிரணிடமிருந்து சுபானி என்பவர் 50 லட்சம் ரூபாயும் பெற்றுக் கொண்டு, கடந்த 16ஆம் தேதி சென்னைக்கு வந்துள்ளனர். மாதவரத்தில் வந்து இறங்கி, அங்கிருந்து ஆட்டோவில் கொடுங்கையூரில் உள்ள நண்பர் வீட்டுக்கு சென்றுள்ளனர்.
கொடுங்கையூர் அருகே காரில் வந்த கும்பல் திடீரென ஆட்டோவை வழிமறித்துள்ளது. தங்களை வருமானவரித்துறையினர் என கூறிக்கொண்ட அவர்கள், அலிகானை மட்டும் காரில் ஏற்றிச் சென்றுள்ளனர். பின்னர் அலிகானிடமிருந்த 68 லட்சம் ரூபாயை வாங்கிக்கொண்டு மஞ்சம்பாக்கம் பகுதியில் இறக்கிவிட்டு சென்றுவிட்டனர்.
பணம் பறிக்கப்பட்டது தொடர்பாக உடனடியாக, அலிகான் தனது உரிமையாளருக்கு தகவல் தெரிவித்ததால், விஸ்வநாதன் கொடுங்கையூர் வந்து போலீசில் புகார் அளித்தார். அதேபோல் சுபானி ஆந்திராவிற்கு சென்று தனது முதலாளியான கிரணிடம் பணத்தை கொடுத்துவிட்டு நடந்ததை கூறியுள்ளார்.
இதையடுத்து, சுபானி, அலிகான் இருவரையும் அழைத்து கொடுங்கையூர் போலீசார் விசாரித்தனர். வழக்கில் முன்னேற்றம் ஏதும் இல்லாததால், போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்தனர். இதைத் தொடர்ந்து பணம் பறிப்பில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த வெங்கட நரசிம்மராவ் (31) என்பவரை கடந்த 23ஆம் தேதி போலீசார் கைது செய்தனர். ஆந்திராவைச் சேர்ந்த அந்த நபரிடமிருந்து 7 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கிரணின் கடையில் வேலை செய்யும் சுபானி மீது சந்தேகம் இருந்ததால் அவரிடம் விசாரணை நடத்தினர். அதில், வருமானவரித்துறையினர் எனக்கூறி பணம் பறித்த கும்பலுக்கும் சுபானிக்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில், சுபானி கொடுத்த தகவலின்பேரிலேயே இந்த கடத்தல் நாடகம் நடத்தி பணம் பறிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து ஆந்திரா, கோவா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்த அந்த கும்பலை போலீசார் கைது செய்தனர், அவர்களிடமிருந்து சுமார் 21 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் நகைக்கடைகளில் பணிபுரிந்தவர்கள் என்பது தெரியவந்தது.
தங்கள் உரிமையாளர்கள் குறிப்பிட்ட இடத்தில் மலிவு விலைக்கு தங்க நகைகளை வாங்கி, அதை ஆந்திராவில் விற்பனை செய்து நல்ல லாபம் பார்ப்பதை அறிந்த ஊழியர்கள், பணத்தை திருடி அதை வைத்து மலிவு விலைக்கு நகைகளை வாங்கி ஆந்திராவில் நகைக்கடை வைக்க திட்டமிட்டதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
மேலும் கொள்ளையடித்த பணத்துடன் கோவா சென்ற கும்பல் அங்கு மசாஜ் சென்டர் மற்றும் ஹோட்டல்களில் தங்கி குதூகலமாக இருந்ததாகவும், பல்வேறு பார்ட்டிகளுக்கு சென்று செலவு செய்ததாகவும் தெரிவித்தனர். பின்னர் நால்வரும் திருப்பதி சென்று, கொள்ளையடிக்கப்பட்ட பணத்திலிருந்து ஒரு லட்சம் ரூபாயை திருப்பதி உண்டியலில் போட்டு பாவ மன்னிப்பு கேட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் கைதான சையத் அப்துல் பாஜி என்பவர் ஆந்திராவில் உள்ள பிரபல தனியார் செய்தி சேனலில் செய்தியாளராக பணிபுரிந்தவர் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 6 பேரைக் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து மொத்தம் 28 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: குழந்தையை கொன்றவருக்கு இரட்டை ஆயுள் - நெல்லை மகிளா நீதிமன்றம் அதிரடி