டெல்லி: கோவிட்-19 காலத்தில் அனைத்து கல்வி நிறுவனங்கள் மூடப்பட்ட நிலையில் எட்டெக் நிறுவனம் எனப்படும் ஆன்லைன் கல்வி தொழில்நுட்ப நிறுவனங்கள் மேல் உயர தொடங்கின. அந்த வகையில் பைஜூஸ்(Byjus), அன்அகாடமி (unacademy), பிசிக்ஸ் வாலா (Physics Wallah) போன்ற எட்டெக் நிறுவனங்கள் மூலம் மாணவர்கள் ஆன்லைன் கற்றல் வழிமுறையை பயன்படுத்தினர்.
இதனால் ஆன்லைன் கல்வி முறை எங்கும் பேசப்பட்டு கொடிகட்டி பறக்க ஆரம்பித்தது. 2018ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிசிக்ஸ் வாலா (Physics Wallah) எனும் ஆன்லைன் கல்வி நிறுவனத்தில், இன்றைய நிலையில் சுமார் 12,000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தற்போது பிசிக்ஸ் வாலா நிறுவனம் 120 பணியாளர்களை செய்ல்திறன் குறைவு காரணமாக பணி நீக்கம் செய்ய போவதாக அறிவித்துள்ளது.
செயல்திறன் ஆய்வில் பிசிக்ஸ் வாலாவின் மொத்த பணியாளர்களில் 0.8 சதவீதத்திற்கும் குறைவானவர்கள் மட்டுமே பாதிக்கப்படுவார்கள் என்று நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தது. இந்நிலையில் பிசிக்ஸ் வாலவின் தலைமை மனித வள அதிகாரி சதீஷ் கெங்ரே கூறுகையில், “ பிசிக்ஸ் வாலாவில் இடைக்கால மற்றும் இறுதி கால ஆய்வின் மூலம் செயல்திறனை நாங்கள் தொடர்ந்து மதிப்பிட்டு வருகின்றோம்.
அக்டோபர் மாதத்தில் முடிவடைந்த ஆய்வில், எங்கள் பணியாளர்களில் 0.8 சதவீதத்திற்கும் குறைவானவர், அதாவது 70 முதல் 120 நபர்களில் செயல்திறன் அடிப்படையில் அவர்களை வேறு நிறுவனத்திற்கு மாற்றி கொள்ள அறிவுறுத்தியுள்ளோம்.
எங்களின் முதன்மையான கோட்பாடு ஒரு ஆற்றல் மிக்க, உயர் செயல்திறன் கொண்ட குழுவை வளர்ப்பதில் தான் உள்ளது. அடுத்த ஆறு மாதங்களில் கூடுதலாக 1,000 பணியாளர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளோம்” என்று அவர் தெரிவித்திருந்தார்.
கரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கான தேவை திடீரென அதிகரித்ததால், இதனை சமாளிக்க முடியாமல் பைஜூஸ், அன்அகடமி, பிசிக்ஸ் வாலா போன்ற எட்டெக் நிறுவனங்கள் அதிகப்படியான பணியாளர்களை நியமித்தனர் என்பது குறிபிடத்தக்கது.
இந்நிலையில் பிசிக்ஸ் வாலா, முதல் முறையாக அதிகப்படியான நபர்களை பணிநீக்கம் செய்கிறது. மேலும், “எங்களது ஊழியர்களின் அர்ப்பணிப்பை நாங்கள் மிகவும் மதிக்கின்றோம் மற்றும் கல்வி தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை வடிவமைக்க அவர்களின் ஒருங்கிணைந்த பங்கை நாங்கள் அங்கீகரிக்கிறோம்” என்று கெங்ரே கூறியுள்ளார்.
இதையும் படிங்க: விசாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் பயங்கர தீ விபத்து: 40க்கும் மேற்பட்ட படகுகள் எரிந்து சேதம்!