டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, பரிசு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார். பல்வேறு மாநிலங்களிலிருந்தும், தனியார் நிறுவனங்களிலிருந்தும் பரிசுகள் வாரி வழங்கப்படுகிறது.
பரிசு மழை
ஹரியானா அரசு 6 கோடி ரூபாயும், பஞ்சாப் அரசு ரூபாய் 2 கோடியும்,பிசிசிஐ ரூபாய் ஒரு கோடியும், சிஎஸ்கே அணி ரூபாய் ஒரு கோடியும், மணிப்பூர் அரசு ரூபாய் ஒரு கோடியும், எலான் குழுமத்தின் தலைவர் ராகேஷ் கபூர் 25 லட்சும் ரூபாயும் பரிசாக வழங்கியுள்ளனர்.
இதுமட்டுமின்றி அவர் 2022 ஆகஸ்ட் 7ஆம் தேதிவரை இன்டிகோ நிறுவனத்தில் ஓராண்டுக்கு எவ்விதக் கட்டணமும் இன்றி பயணிக்கலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மகிந்திரா தலைவர் ஆனந்த் மகிந்திரா, நீரஜ்க்கு புதிய எக்ஸ்யுவி 700 வகை சொகுசு கார் பரிசாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
சொகுசு கார் முதல் கோடிக்கணக்கான ரொக்கப் பணம் வரை பரிசு மழையில் நனையும் சோப்ராவின் வெற்றியை உள்ளூர் மக்களும் கொண்டாடி வருகின்றனர்.
இலவச பெட்ரோல்
அதன்படி, குஜராத்தில் பாரூச் மாவட்டத்தின் நேத்ராங் பகுதியில் செயல்படும் பெட்ரோல் பங்க், நீரஜ் என பெயர் கொண்டவர்களுக்கு, 501 ரூபாய்க்கு இலவசமாக பெட்ரோல் வழங்குவதாக அறிவித்திருந்தது.
ஆகஸ்ட் 9 ஆம் தேதி மாலை 5 மணி வரை பெட்ரோல் இலவசமாக வாங்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு, அந்நபர்கள் அடையாள அட்டையைக் கொண்டு வர வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனர்.
ரோப்வே பயணம் இலவசம்
இதே போல, ஜுனாகத்தில் உள்ள உடான் கட்டோலா ரோப்வேயில், ஆகஸ்ட் 20 ஆம் தேதி வரை, நீரஜ் என பெயர் கொண்டவர்கள் இலவசமாகப் பயணிக்கலாம் என உஷா பிராகோ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புகள் நீரஜ் பெயர் கொண்ட மக்களை, குஷியில் ஆழ்த்தியுள்ளது. தங்க மகனின் வெற்றியை அனைவரும் கொண்டாடிவருகின்றனர்.
இதையும் படிங்க: ஜந்தர் மந்தரில் ஆட்சேப கோஷங்கள்- போலீசார் வழக்குப்பதிவு!