பெங்களூரு(கர்நாடகம்): பெங்களூரு நகரத்தின் பல்வேறு இடங்களில் ‘PAYCM' எனப் போஸ்டர்களை ஒட்டி அரசிற்கு எதிராக நூதன முறையில் எதிர்க்கட்சியான அம்மாநில காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆளும் அரசு அனைத்து செயல்களுக்கும் 40 விழுக்காடு கமிஷன் வாங்குவதாக குற்றஞ்சாட்டிய காங்கிரஸ் கட்சினர், இவ்வாறு போஸ்டர்களை ஒட்டி நடத்தி வருகின்றனர்.
சுவர்களில் கியூஆர் கோடுடன் ‘PAYCM' என எழுதி, கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் புகைப்படத்துடன் கூடிய போஸ்டர்கள் பெங்களூரு நகரமெங்கும் ஒட்டப்பட்டுள்ளன. இதன்மூலம் ஆளும் பாஜக அரசு ஊழல் செய்துவருவதாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
மேலும், இந்தப் போஸ்டர்களில் உள்ள கியூஆர் கோடை ஸ்கேன் செய்தால் நம்மை ‘40% கமிஷன் அரசு’ எனும் இணையதளத்திற்கு அழைத்துச்செல்லும். இந்த இணையதளம் காங்கிரஸ் கட்சியினரால் சமீபத்தில் புகார் அளிப்பதற்காக உருவாக்கப்பட்டது.
இதன்மூலம் மக்கள் தங்களின் புகார்களை காங்கிரஸ் கட்சியின் இணையதளத்தில் வைக்கலாம். மேலும், அரசின் ஊழல் குறித்த தங்களின் கருத்துகளையும் அதில் பகிரலாம். இந்நிலையில், இந்தப் போஸ்டர்களை ஒட்டியவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சாலையிலுள்ள மழை நீர் பள்ளங்கள் அருகே மணமகளின் ஃபோட்டோ சூட்: இணையத்தில் வைரல்