ஜபல்பூர் : மத்திய பிரதேசத்தில் லோக் ஆயுக்தா அதிகாரிகளை கண்டதும் லஞ்சப் பணத்தை வாயில் திணித்து முழுங்க முயன்ற அரசு வருவாய்த் துறை அலுவலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டம் கட்னி பகுதியைச் சேர்ந்தவர் கஜேந்திர சிங். கிராம நிர்வாக அலுவலருக்கு இணையான வருவாய்த் துறையினர் பட்வாரி பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், நில விவாகரம் தொடர்பாக புகார் அளிக்க வந்த பொது மக்கள் ஒருவரிடம் கஜேந்திர சிங் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
புகார் அளிக்க வந்த சந்தன் சிங் லோதி, நில விவகார பிரச்சினையை தீர்க்க பட்வாரி தன்னிடம் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்பதாக ஜபல்பூர் மாவட்ட் லோக் ஆயுக்தா அதிகாரிகளிடம் புகார் அளித்து உள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்திய லோக் ஆயுக்தா அதிகாரிகள் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சந்தன் சிங் லோதியிடம் வழங்கி, பட்வாரி கஜேந்திர சிங்கிற்கு கொடுக்குமாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : நம்பிக்கையில்லா தீர்மானம்... எதிர்க்கட்சிகள் திட்டம்! பாஜக எம்.பிக்களை கடிந்து கொண்ட பியூஷ் கோயல்! எதுக்கு தெரியுமா?
இதையடுத்து மறைந்து இருந்த லோக் ஆயுக்தா அதிகாரிகள், லஞ்சம் வாங்கும் போது பட்வாரி கஜேந்திர சிங்கை கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டு உள்ளனர். இதனிடையே லோக் ஆயுக்தா அதிகாரிகளை கண்ட பட்வாரி கஜேந்திர சிங் உடனடியாக 4 ஆயிரத்து 500 ரூபாய் லஞ்ச பணத்தை விழுங்கி உள்ளார்.
இதைக் கண்டு அதிர்ந்து போன லோக் ஆயுக்தா அதிகாரிகள் கஜேந்திர சிங்கை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். நீண்ட போராட்டத்திற்கு பின் கஜேந்திர சிங்கின் வாயில் இருந்து லஞ்சப் பணத்தை மருத்துவர்கள் மீட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக லோக் ஆயுக்தா அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். விசாரணை வளையத்தில் இருந்து தப்பிக்க லஞ்சப் பணத்தை வாயில் வைத்து விழுங்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரசு ஊழியர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் அமைப்பாக லோக் ஆயுக்தா அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பு ஒரு தலைவர் மற்றும் 4 உறுப்பினர்களை கொண்டு இயங்கும். அந்த நான்கு பேர்ரில் இருவர் நீதித் துறையை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை இந்த அமைப்பினர் விசாரித்து நடவடிக்கை எடுப்பர்.
இதையும் படிங்க : எதிர்க்கட்சித் தலைவர்களுடன் சபாநாயகர் ஓம் பிர்லா அவசர சந்திப்பு! என்னவா இருக்கும்?