பாட்னா : பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து வெளியிட்ட வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான மனுவை பாட்னா உயர் நீதிமன்றம் விசாரிக்கிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம், கோலாரில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து வெளியிட்டார். “நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என அனைவருக்கும் எப்படி ஒரே பெயராக இருக்க முடியும்? எப்படி அனைத்து திருடர்களும் மோடி என்ற இணை பெயரோடு இருக்க முடியும்?” என ராகுல் காந்தி பேசினார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து குஜராத் பாஜக சட்டமன்ற உறுப்பினர் புர்னேஷ் மோடி, சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது வழக்குத் தொடர்ந்தார். பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து வெளியிட்ட வழக்கில் ராகுல் காந்தியை குற்றவாளி என அறிவித்த சூரத் நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
மேலும், ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கொள்காட்டி மக்களவைச் செயலகம் ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை பறித்து நடவடிக்கை மேற்கொண்டது. அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்த்து சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம் அதைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதேநேரம் பாட்னா நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிராக மேலும் ஒரு வழக்குத் தொடரப்பட்டது. பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் மற்றும் பாஜக எம்.பி.யுமான சுஷில் குமார் கடந்த 2019ஆம் ஆண்டு இந்த வழக்கை தொடுத்து இருந்தார்.
இந்த வழக்கின் விசாரணைக்கு ராகுல் காந்தி ஆஜராகாமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில், கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்வதாக நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ராகுல் காந்தியின் மேல் முறையீட்டு மனு குறித்த விசாரணையை அறிந்த பாட்னா உயர் நீதிமன்றம் அவருக்கு இடைக்கால நிவாரணம் வழங்கியது.
மேலும் வழக்கு விசாரணையை வேறொரு நாளுக்கு மாற்றி உத்தரவிட்டது. இந்த நிலையில், இன்று (மே. 15) பாட்னா உயர் நீதிமன்றம் வழக்கு குறித்து விசாரணை நடத்துகிறது. இந்த வழக்குத் தொடர்பாக சுஷில் குமார் மோடி உள்பட 5 பேரிடம் நீதிமன்றம் வாக்குமூலம் பெற்று உள்ளது. மேலும் இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு போதுமான தண்டனையை வழங்க வேண்டும் என சுஷில் குமார் தெரிவித்து இருந்தார்.
அண்மையில் கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றி உள்ள நிலையில், இந்த வழக்கின் விசாரணை உற்று நோக்கும் ஒன்றாக மாறி உள்ளது.
இதையும் படிங்க : ரூ.100 கோடி நஷ்ட ஈடு கோரி அவதூறு வழக்கு - மல்லிகார்ஜுன கார்கேவுக்கு நோட்டீஸ்!