டெல்லி: நடிகர் ஷாருக்கான் நடிப்பில் தயாரான பதான் திரைப்படம் கடந்த 25ஆம் தேதி உலகளவில் வெளியானது. கடந்த 2018ஆம் ஆண்டு ஜூரோ படத்தின் தோல்விக்குப் பிறகு ஏறத்தாழ 4ஆண்டுகளுக்கு பின் ஷாருக்கான் திரைப்படம் வெளியாவதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
மேலும் படத்தில் நடிகை தீபிகா படுகோன், நடிகர் ஜான் ஆபிரகாம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அதேநேரம் பட ரிலீஸ் முன்னரே பதான் திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது. அதுவே அந்த படத்திற்கு கூடுதல் விளம்பரமாக அமைந்தது. இந்நிலையில் பதான் திரைப்படம் உலகளவில் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது.
படம் ரிலீசான முதல் நாளில் மட்டும் உலகளவில், 106 கோடி ரூபாயை வசூல் செய்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எப்.2 திரைப்படத்தின் வசூல் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு வசூல் சாதனைகளை ஷாருக்கானின் பதான் திரைப்படம் நிகழ்த்தி இருப்பதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பதான் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. இதில், இந்தியில் மட்டும் பதான் படம் 55 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. பிற மொழிகளை சேர்த்து மொத்தமாக இந்தியாவில் 57 கோடி ரூபாய் பதான் வசூல் செய்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
அதேபோல் ஆஸ்திரேலியாவில் 6 லட்சம் டாலர் மற்றும் அமெரிக்காவில் 10 லட்சம் டாலர் என வசூல் சாதனையை பதான் படம் நிகழ்த்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் அதிக வசூல் சாதனைப் படைத்த முதல் இந்தி படம் என்ற மைல்கல்லை நடிகர் ஷாருக்கானின் பதான் படம் படைத்துள்ளது.
இதையும் படிங்க: குடியரசு தினம்: வண்ண வண்ண விளக்குகளால் ஜொலித்த நாடாளுமன்றம்..