டெல்லி: தமிழ்நாட்டில் 7 சாதிகளை உள்ளடக்கிய தேவேந்திர குல வேளாளர் இணைப்பு மாநிலங்களவையில் நேற்று (மார்ச் 22) நிறைவேறியது. பின்னர், இது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அளிக்கப்படும்.
இதன் மீதான விவாதத்திற்கு பதிலளித்த சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் தாவர் சந்த் கெஹ்லோட், “பி ஆர் அம்பேத்கர் நினைவாக வடிவமைக்கப்பட்ட திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நிறைவு செய்துவருகிறார்” என்றார்.
தொடர்ந்து பாஜக மீது சுமத்தப்படும் இடஒதுக்கீடு ரத்து தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “நாங்கள் இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டுவருவது பற்றி ஒருபோதும் நினைத்ததில்லை” என்றார். மேலும், “மக்களவை தேர்தலில் அம்பேத்கரை தோற்கடித்தது யார்” என்றும் கேள்வியெழுப்பினார்.
இதையடுத்து, “தற்போதைய பாஜக அரசாங்கம் சட்டங்களின்படி இயங்குகிறது. அதனடிப்படையில் எங்கள் அரசாங்கம் இடஒதுக்கீட்டை தொடர்ந்து ஆதரித்து வருகிறது. அடல் பிஹாரி வாஜ்பாயிடம் அது இருந்தது, நரேந்திர மோடியிடம் அதேகொள்கை இருக்கிறது. நாங்கள் இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டுவர முயற்சிக்கிறோம் என்ற விமர்சனம் உண்மையிலிருந்து வெகு தொலைவில் உள்ளது” என்றார்.
இதற்கிடையில், தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இம்மசோதா முன்னெடுக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டையும் அமைச்சர் தாவர் சந்த் கெஹ்லோட் நிராகரித்தார்.