மத்தியப்பிரதேச மாநிலம், கந்த்வா மாவட்டத்தில் சமீபத்தில் மைனர் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். தற்போது அந்த சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தையை ஏற்க சிறுமியின் பெற்றோர் மறுப்புத்தெரிவித்துள்ளனர்.
மேலும் குழந்தையைப் பராமரிக்க அரசாங்கத்தின் சைல்டு லைன் அல்லது தத்தெடுக்கும் நிறுவனத்தை வலியுறுத்தியுள்ளனர். காவல் துறையினர் அளித்த தகவலின்படி, குழந்தை காந்த்வா குழந்தைகள் நலக்குழுவின் பராமரிப்பில் உள்ளது.
இது குறித்து குழந்தைகள் நலக் குழுவின் தலைவர் விஜய் சனாவா கூறுகையில், ‘குழந்தைகள் நலக்குழு புதிதாகப் பிறந்த குழந்தையைப் பராமரித்து வருகிறது. குழந்தைகள் பாதுகாப்பு மையம் சார்பாக சிறுமியின் பெற்றோருக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கவும் தயாராக உள்ளது’ எனத் தெரிவித்தார். இதனையடுத்து குழந்தையை சிறுமியின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும்போது சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படும் என காவல் துறையினர் தெரிவித்தனர்.
அவர்கள் குழந்தையை ஏற்க மறுத்தால், பிறந்த குழந்தையை ஏற்கமுடியாது என விண்ணப்பம் அளிக்க பரிந்துரைக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பிறந்த குழந்தை குறித்து முடிவெடுக்க இரண்டு மாத கால அவகாசம் வழங்கப்படும். குறிப்பிட்ட காலம் முடிந்த பிறகு, பிறந்த குழந்தை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கு - மீண்டும் தூசிதட்டிய உயர் நீதிமன்றம்