20 ஆண்டுகளுக்கு முன்பு, 8 வயதான கீதா, பாகிஸ்தானில் உள்ள லாகூர் ரயில் நிலையத்திற்கு சம்ஜெளதா விரைவு ரயிலில் சென்றுள்ளார். ரயில் நிலையத்தில் தனியாக தவித்த சிறுமியை, அங்கிருந்தவர்கள் மீட்டு எதி அறக்கட்டளையிடம் ஒப்படைத்தனர்.
பாதுகாவலர்களிந் அரவணைப்பில் வளர்ந்த கீதா, குடும்பத்தினருடன் இணைய விரும்பியதால், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, அப்போது மத்திய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த சுஷ்மா சுவராஜ் முயற்சியால் இந்தியா அழைத்துவரப்பட்டார். அவரை இந்தியாவின் மகள் என அமைச்சர் சுஷ்மா அன்போடு அழைத்தார்.
30 வயதை எட்டியுள்ள கீதா, தற்போது இந்தூரில் வசித்துவருகிறார். சிறு வயதில், சென்ற இடங்களை ஞாபகப்படுத்தி பெற்றோரை அறக்கட்டளை ஊழியர்களின் உதவியோடு கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தேடிவருகிறார். கீதா சொன்ன அடையாளங்களான வீடு, ரயில் நிலையம், கோயில்கள் வைத்து, அவரின் வீடு மகாராஷ்டிரா மாநிலம் நாண்டெட் பகுதியாக இருக்கக்கூடும் எனக் கருதினர். அதேபோல், நாண்டெட்டிலிருந்து 100 கிமீ தொலைவில் உள்ள பாசம் பகுதியும் ஒன்றிப்போனதால், அங்கேயும் தேடுதல் பணியைத் தொடங்கினார்.
ஆனால், அங்கு பெற்றோரைப் பார்க்கப்போறோம் என்ற ஆசையில் சென்ற கீதாவுக்கு, மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு சுமார் 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கீதா எனது மகள் என வருகை தந்திருந்தனர்.
தெலங்கானா மாநிலம் மட்டுமின்றி மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், பிகார், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் கீதாவை தங்களிடம் ஒப்படைக்குமாறு அறக்கட்டளை ஊழியர்களிடம் கேட்டனர். தற்போது, ஊழியர்கள் செய்வதறியாமல் திகைத்துள்ளனர். பெற்றோரை எப்போது தன் கண்களால் பார்ப்போம் என கீதா வழி மீது விழி வைத்து காத்திருக்கிறாள்.