நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான இன்று மக்களவையில் உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.
அதில், கடந்த ஐந்தாண்டுகளில் சுமார் ஆறு லட்சம் பேர் இந்திய குடியுரிமையை துறந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அதன்படி, 2017ஆம் ஆண்டில் 1.33 லட்சம் பேரும், 2018ஆம் ஆண்டில் 1.34 லட்சம் பேரும், 2019ஆம் ஆண்டில் 1.44 லட்சம் பேரும், 2020ஆம் ஆண்டில் 85,248 பேரும், 2021ஆம் ஆண்டில் செப்டம்பர் 1.11 லட்சம் பேரும் இந்திய குடியுரிமையை வேண்டாம் என துறந்துள்ளனர்.
மேலும் அந்த பதிலில், கடந்த நான்கு ஆண்டுகளில் வெளிநாட்டினர் 10,645 பேர் இந்திய குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ளதாகவும், அதில் 4,177 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களே அதிகபட்சமாக இந்திய குடியுரிமையைக் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.
அரசின் தற்போதைய புள்ளிவிவரப்படி, சுமார் ஒரு கோடியே 33 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்தியர்கள் வெளிநாடுகளில் வசித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: டெல்டா தொற்றுக்கு எதிராக சிறப்பாக செயல்படும் கோவிஷீல்டு - சர்வதேச ஆய்வில் தகவல்