புதுச்சேரி மாநிலத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த முன்பதிவு செய்தால் மட்டுமே வெளிப்புற சிகிச்சை வழங்கப்படும் என ஜிப்மர் மருத்துவனை நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை சார்பில் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில், “புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஒன்பதாம் தேதி முதல் அனைத்து மருத்துவ, அறுவை சிகிச்சை பிரிவுகளில் முன்பதிவு செய்ய வேண்டும். தொலை மருத்துவ ஆலோசனைக்கு பிறகே வெளிப்புற சிகிச்சை அளிக்கப்படும். வெளிப்புற சிகிச்சை பெற விரும்புவோர் தொலைபேசி மூலம் முன்பதிவு செய்ய வேண்டும்.
அதேபோல் அனைத்து அவசர சிகிச்சைகளும் வழக்கம்போல் முன்பதிவின்றி தொடரும். இதற்கான தொலைபேசி எண்கள் பற்றிய விவரங்கள் www.jipmer.edu.inஎன்ற வலைதளத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம். பொதுமக்கள் ’ஹலோ ஜிப்மர்’ எனப்படும் ஆண்ட்ராய்டு செயலி உதவியுடன் வெளிப்புற சிகிச்சை சேவைகளுக்கு முன்பதிவு செய்யலாம்.
ஊழியர்கள் தொடர்புகொண்டு விபரங்களை கேட்டறிந்து, தேவைப்படுபவர்களுக்கு மட்டும் மருத்துவமனைக்கு வருமாறு எஸ்எம்எஸ் அனுப்பி வைப்பர். ஒவ்வொரு துறையிலும் தினமும் நூறு நோயாளிகள் மட்டும் நேரில் வந்து மருத்துவ ஆலோசனை பெற அனுமதிக்கப்படுவர்.
முன் அனுமதிக்கான மொபைல் எஸ்எம்எஸ் உறுதி செய்த பிறகே மருத்துவமனைக்கு உள்ளே அனுமதிக்கப்படுவர். நோயாளிகளுடன் ஒரு நபர் மட்டுமே வரவேண்டும். கரோனா தொற்று மருத்துவமனை மூலம் பரவுவதை தவிர்க்க, ஜிப்மர் மருத்துவமனையின் முயற்சிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பளிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : செக் மோசடி வழக்கு: ராதிகாவுக்கு பிடிவாரண்ட்; சரத்குமார் எஸ்கேப்!