விஜயவாடா: விசாகப்பட்டினம் உருக்காலையை தனியார்மயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. 2021-22ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தனியார்மயமாக்கும் இலக்கில் விசாகப்பட்டினத்தின் உருக்காலையும் இடம்பெற்றுள்ளது.
இந்த நடவடிக்கையை, அம்மாநிலத்தில் உள்ள பல கட்சிகள் எதிர்த்துவருகின்றன. அம்மாநில பாஜகவைத் தவிர பிற கட்சிகள், டெல்லியில் தொழிற்சங்கங்கள் நடத்தும் தர்ணா போராட்டத்தில் கலந்துகொள்ள இருக்கின்றன.
இது தொடர்பாக பேசிய அம்மாநில சிபிஐ செயலாளர் கே. ராமகிருஷ்ணா, "ஆந்திராவில் உள்ள சில கட்சிகளுடன் இணைந்து நடத்திய கூட்டத்தில், விசாகப்பட்டினம் உருக்காலையை தனியார்மயப்படுத்துவதற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தனியார்மயம் தவிர்!
சிபிஐ நடத்திய இக்கூட்டத்தில், டெல்லியில் நடத்தப்படவிருக்கும் தர்ணா குறித்து கருத்து கேட்கப்பட்டது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாகவே ஒன்றிய அரசு விசாகப்பட்டினம் இரும்பு ஆலையை தனியார்மயமாக்க முடிவு செய்துவிட்டது.
ஆந்திராவில் பாஜகவும், அதன் தோழமைக் கட்சியான ஜன சேனா கட்சியையும் தவிர மற்ற கட்சிகள் இந்த முடிவை கடுமையாக எதிர்த்துவருகின்றன. தற்போது ஆட்சியில் இருக்கும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி இந்தத் திட்டத்திற்கு எதிராகச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
ஒன்றிய அரசுக்கு கண்டனம்
விசாகப்பட்டினம் உருக்காலையை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது என தொழிற்சங்கங்களும், தொழிலாளர்களும் போராடிவரும் நிலையில், கடந்த 8ஆம் தேதி அதன் செயல்முறையை விரிவுப்படுத்துவதற்காக சட்டம் மற்றும் தொழில்நுட்ப ரீதியான ஆலோசகர்களை ஒன்றிய அரசு நியமிக்க முடிவுசெய்துள்ளது.
இதைக் கண்டித்து அனைத்துக் கட்சிகள் கூட்டம் நடத்தி, தர்ணாவில் பங்கேற்க முடிவுசெய்துள்ளோம். இந்தப் போராட்டம் டெல்லியில் எங்களது முடிவை எதிரொலிக்கும். இந்தப் போராட்டத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பங்கேற்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: விசாகப்பட்டினம் உருக்காலை தனியார்மயம்; ஆந்திர அரசுக்கு எதிராக சந்திரபாபு நாயுடு போர்க்கொடி