பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 28ஆம் தேதியும், இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு இன்றும் நடைபெற்றது.
இந்நிலையில், பிகார் முதலமைச்சரும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார் மதுபானி மாவட்டத்தில் பரப்புரையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென்று யாரும் எதிர்பார்க்காத வகையில் முதலமைச்சரை நோக்கி கற்களும் வெங்காயங்களும் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவத்தின்போது நிதிஷ்குமார், "அவர்களை விடுங்கள்... அவர்கள் கற்களை வீசட்டும். விரைவில், எதிர்க்கட்சியினர் எத்தனை வேலைவாய்ப்புகள் உருவாக்குவார்கள் என்பதை அவர்கள் தெரிந்துகொள்வார்கள்" என்றார்.
ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் வெற்றிபெற்ற பின் தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே 10 லட்சம் அரசு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அதை மறைமுகமாக குறிப்பிட்டே நிதிஷ்குமார் கற்களை வீசும்போது பேசியிருந்தார்.
பிகார் மாநிலத்தில் வரும் நவம்பர் 7ஆம் தேதி மூன்றாம்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதைத்தொடர்ந்து நவம்பர் 10ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க: 'நிதிஷ் தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும்' - ரவிசங்கர் பிரசாத்