சண்டிகர்: ஹரியான மாநில முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சௌதாலா மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில், சிபிஐ விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், ஓம் பிராகாஷ் சௌதாலா 1993 - 2006 ஆகிய ஆண்டுகளில் 6 கோடி ரூபாய் அளவில், தனது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குறிப்பிட்டுள்ளது.
மேலும், இவர் மீதான பணமோசடி குற்றச்சாட்டில் டெல்லி, பஞ்ச்குலா, சிர்சா ஆகிய நகரங்களில் உள்ள 3.68 கோடி ரூபாய்க்கு குடியிருப்புகள், கட்டடங்கள் ஆகிய சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. ஓம் பிரகாஷ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் (சிபிஐ நீதிமன்றம்) இரு தரப்பு வாதங்களையும் விசாரித்த நிலையில், கடந்த மே 19ஆம் தேதி இவ்வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டது.
இந்நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பை சிபிஐ நீதிமன்றம் நேற்று (மே 21) அறிவித்தது. அதில், ஓம் பிரகாஷ் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு உறுதிசெய்து, அவரை குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும், அவருக்கான தண்டனை விவரம் வரும் மே 26ஆம் தேதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஹரியானாவில் ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு ஊழல் வழக்கில் 10 ஆண்டுகள் தண்டனை பெற்று திகார் சிறையில் ஓம் பிரகாஷ் செளதாலா இருந்து வந்தார். கடந்தாண்டு ஜூலை மாதம் அவர் சிறையில் இருந்து விடுதலையான நிலையில், தற்போது மற்றொரு வழக்கில் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் 1999ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை ஹரியானாவின் முதலமைச்சராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தி கிரேட் காமாவிற்கு டூடல் வெளியிட்ட கூகுள்!