இந்தியாவில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை பாதிப்பு உச்சத்தில் உள்ளது. தினந்தோறும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். இது ஒருபுறம் இருக்க, அண்மையில் அரபிக்கடலில் உருவான டவ்-தே புயல், குஜராத்தைப் புரட்டி எடுத்தது.
இதன் காரணமாக, மகாராஷ்டிரா, குஜராத்தில் கனமழை பெய்தது. 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 'டவ் தே' புயல் கரையைக் கடந்து ஓரிரு நாள் முடிவதற்கு, அடுத்து களத்திற்கு வந்தது தான் யாஷ் புயல்.
தற்போதைய நிலவரப்படி, வங்காள விரிகுடா கடற்பரப்பில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை, மேலும் தீவிரமடைந்து தீவிரப் புயலாக மேற்கு வங்கத்தை நோக்கிச் செல்ல வாய்ப்புள்ளது.
வரும் மே 26 ஆம் தேதி மாலை, வடக்கு ஒடிசா மற்றும் பங்களாதேஷ் கடற்கரைகளை யாஷ் புயல் கடக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. யாஷ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஒடிசாவில் தாழ்வான பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்ற அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.
அதே போல, மேற்கு வங்கத்தில் புயலின் பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள 'வார் ரூம்'மை முதலமைச்சர் மம்தா பானர்ஜி தொடங்கியுள்ளார். மீட்புப் படையினர் இரண்டு மாநிலங்களிலும் தயார் நிலையில் உள்ளனர்.