தெலங்கானா: தெலங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள், குடியிருப்புப் பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. மேலும், சில நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கனமழை காரணமாக முலுகு மாவட்டம் வெங்கடாபுரம் அருகே உள்ள முத்யம் தாரா நீர்வீழ்ச்சியில் அதிகளவு தண்ணீர் கொட்டுகிறது. நீர்வீழ்ச்சியில் காட்டாற்று வெள்ளம்போல் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், நீர்வீழ்ச்சிக்கு செல்லக்கூடாது என வனத்துறை தடை விதித்துள்ளது.
இந்த நிலையில், வாரங்கல் மற்றும் கரீம் நகர் பகுதிகளில் இருந்து 134 சுற்றுலாப் பயணிகள் நேற்று (ஜூலை 26) மாலை தடையை மீறி முத்யம் தாரா நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளனர். கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் அங்கு சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் திரும்பி வந்து கொண்டிருந்தபோது, திடீரென நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகரித்து, வழியெங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி உள்ளது. இதனால், சுற்றுலாப்பயணிகள் அங்கேயே சிக்கிக் கொண்டனர். நீண்ட நேரம் காத்திருந்தும் வெளியேற வழி கிடைக்காததால், சுற்றுலாப் பயணி ஒருவர் காவல் துறை அவசர எண்ணிற்கு அழைத்து தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து முலுகு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது உத்தரவின் பேரில் போலீசார், மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மீட்புக் குழுவினர் நான்கு பேருந்துகளில் சென்றனர். ஆனால், நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழியில் பல ஓடைகள் இருந்ததால் மீட்புப் படையினர் அப்பகுதிக்கு பேருந்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், மீட்புப் படையினர் ஓடையில் இறங்கி நடந்தே சென்றனர்.
இதனிடையே, நீர்வீழ்ச்சியில் சிக்கியிருந்த சுற்றுலாப் பயணிகளை தொடர்பு கொண்ட மாவட்ட எஸ்பி காஷ் ஆலம், எந்த நிலையிலும் தண்ணீரைக் கடக்க முயற்சிக்க வேண்டாம் என்றும், மீட்புக் குழுவினர் வருகிறார்கள் என்றும் தெரிவித்தார். மேடான இடத்தில் இருக்கும்படியும், செல்போன்களை பத்திரமாக வைத்துக் கொள்ளும்படியும் அறிவுறுத்தினார்.
இதனையடுத்து மீட்புப் படையினர் இரவு நேரத்தில் சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று நீர்வீழ்ச்சியை அடைந்தனர். பாதிக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீரையும் மீட்புக்குழுவினர் எடுத்துச் சென்றனர். இதனையடுத்து, அதிகாலை 2.20 மணியளவில் வெள்ளத்தில் சிக்கியிருந்த சுற்றுலாப்பயணிகளை மீட்புக் குழுவினர் மீட்டனர்.
காலையில் அவர்களை பத்திரமாக அப்பகுதியில் இருந்து வெளியே கொண்டு வந்து, பேருந்துகளில் அவர்களது இருப்பிடத்திற்கு அனுப்பி வைத்தனர். மிகவும் மோசமான சூழ்நிலையில், உயிரைப் பணயம் வைத்து சுற்றுலாப் பயணிகளை மீட்ட மீட்புக் குழுவுக்கு பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சீரியல் செட்டிற்குள் நுழைந்த சிறுத்தை - பதைபதைக்க வைக்கும் காட்சிகள்!