புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி கடந்த 2011ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் என்னும் புதிய கட்சியைத் தொடங்கினார். இந்நிலையில், அகில இந்திய என்ஆர் காங்கிரஸ் கட்சியின் பத்தாம் ஆண்டு விழா இன்று (பிப்.7) புதுச்சேரியில் நடைபெற்றது.
அக்கட்சியின் தலைவர் ரங்கசாமி தலைமையில் நடந்த இந்த விழாவில் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பின்னர் விழா மேடையில் பேசிய ரங்கசாமி, "மாநில அந்தஸ்து பெற்றால் மட்டுமே புதுச்சேரி வளரும். அதனால் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற அனைத்து கட்சிகளையும் வலியுறுத்த வேண்டும்.
மாநில அந்தஸ்து வழங்கினால் மட்டுமே தேர்தலை சந்திப்போம் என அனைத்து கட்சிகளும் அறிவிக்க வேண்டும். புதுச்சேரியில் அதிக இடங்களில் என்ஆர் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்" என்றார்.
முன்னதாக ஜனவரி 8ஆம் தேதி நடந்த சிறப்பு சட்டசபை கூட்டத்தில் புதுச்சேரி மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1987ஆம் ஆண்டு முதல் 9 முறை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், தற்போது 10ஆவது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அய்யம்பட்டி ஜல்லிக்கட்டு - பார்வையாளர் ஒருவர் உயிரிழப்பு