புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. மொத்தமுள்ள 30 தொகுதிகளில் பாஜக கூட்டணியில் உள்ள என்.ஆர். காங்கிரஸூக்கு 16 இடங்களும் அதிமுக - பாஜகவிற்கு 14 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி, இரண்டு தொகுதிகளில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். மார்ச் 15ஆம் தேதி தனது ஆதராவளர்கள் புடைசூழ தட்டாஞ்சாவடி தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
இன்று முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் உள்ளிட்ட தனது ஆதரவாளர்களுடன் இணைந்து ஆந்திராவில் உள்ள ஏனாம் தொகுதிக்கு RX 100 வாகனத்தில் பயணித்தார். பின்பு மாவட்ட நிர்வாக அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் அனுமன் சர்மாவிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். தொடர்ந்து அப்பகுதியில் கூட்டணிக் கட்சி தொண்டர்களுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இவர் கடந்த 2011 சட்டப்பேரவை தேர்தலில் இந்திராநகர், கதிர்காமம் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார்.