நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி விநியோகம் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. 60 வயதுக்கு மேலானவர்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், கர்நாடக வேளாண்துறை அமைச்சர் பி.சி. பாட்டில், விதிகளை மீறி ஹைரேகூரில் அமைந்துள்ள தனது வீட்டிலேயே தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், "இந்த செயல் கரோனா தடுப்பூசி விநியோக நெறிமுறைகளுக்கு எதிரானது" என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். மேலும் தடுப்பூசி விதிமீறல் குறித்து மாநில அரசை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து சுகாதாரத்துறை அலுவலர் மகந்தர் கூறுகையில், "அனுமதி வழங்கப்பட்ட மாவட்ட, தாலுகா தடுப்பூசி மையங்களில் மட்டுமே தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். வீட்டிலேயே தடுப்பூசி செலுத்தும்படி அமைச்சர் கேட்டுக் கொண்டார். எனவேதான் அங்கு சென்றோம்" என்றார்.
அமைச்சர் தனது வீட்டிலேயே தடுப்பூசி செலுத்தி கொண்ட புகைப்படம் சமூகவலைதளத்தில் பெரும் விமர்சனத்துக்குள்ளான நிலையில், மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர், பாட்டிலின் செயலுக்கு அதிருப்தி தெரிவித்துள்ளார்.