டேராடூன்: உத்தரகண்டில் உள்ள 150க்கும் மேற்பட்ட கோயில்களில் வைக்கப்பட்டுள்ள பதாகைகளில், “இந்துக்கள் அல்லாதோருக்கு கோயிலுக்குள் அனுமதியில்லை” என்று எழுதப்பட்டுள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள 150க்கும் மேற்பட்ட கோயில்களில், “கோயில் வளாகத்தில் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது” என்று பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
டேராடூனின் சக்ரதா சாலை, சுத்தோவாலா மற்றும் பிரேம் நகர் பகுதிகளில் அமைந்துள்ள கோயில்களுக்கு வெளியே இந்து யுவ வாகினி அமைப்பினர் இந்தப் பதாகைகளை வைத்துள்ளனர்.
இந்நிலையில், இந்துக்களின் பாதுகாப்புக்காக பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதாக இந்து யுவ வாகினி மாநில துணைத் தலைவர் சஞ்சய் மேத்தா தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், “மற்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கோயிலில் வந்து கடவுளின் சிலைகளை சேதப்படுத்துகிறார்கள், இந்துத் தெய்வங்களை பொறுத்துக்கொள்ள முடியாத சிலர், இந்தச் சமூக விரோத செயல்களைச் செய்கிறார்கள். எனவே பதாகைகள் வைத்துள்ளோம்” என்றார்.
இந்து யுவ வாகினியின் மாநிலத் தலைவர் கோவிந்த் இந்துஸ்தானி, “கோயில் சனாதன தர்மத்தை நம்புபவர்களின் மதிப்பிற்குரிய இடமாகும், இங்கு இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். மேலும் கோயில்கள் சுற்றுலா தலங்கள் இல்லை.
ஆகவே இதுபோன்ற பதாகைகளை அனைத்துக் கோயில்களிலும் வைக்க வேண்டும். எதிர்வரும் நாள்களில் இதுபோன்ற பதாகைகளை அனைத்து கோயில்களிலும் வைக்க திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
இந்நிலையில் சர்ச்சைக்குள்ளான பதாகையில் வைக்கப்பட்டிருந்த பெயர்கள், செல்போன் எண்கள் அடிப்படையில் சிலரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் கோயிலில் இருந்த பதாகைகள் அகற்றப்பட்டுள்ளன.