டெல்லி: கோயம்புத்தூர் சுங்கம் பகுதியில் செயல்படும் இந்திய விமானப்படை பயிற்சி கல்லூரிக்கு (IAFC) கடந்த மாதம் 15ஆம் தேதி பல்வேறு மாநிலங்களில் இருந்து 30 அலுவலர்கள் பயிற்சிக்காக வந்துள்ளனர்.
அப்போது பயிற்சிக்கு வந்த பெண் விமானப்படை அலுவலர் ஒருவர், தான் கடந்த செப்டம்பர் 10ஆம் தேதியன்று ஓய்வெடுத்திருந்த நிலையில், அங்கு பயிற்சிக்காக வந்த விமானப்படை லெப்டினன்ட் அமிதேஷ் ஹர்முக் எனும் சக அலுவலர், தன்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக செப்டம்பர் 20ஆம் தேதி கோயம்புத்தூர் காந்திபுரம் மத்திய அனைத்து மகளிர் நிலையத்தில் புகார் அளித்தார்.
விமானப்படையிடம் ஒப்படைப்பு
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி அமிதேஷை கைது செய்து நீதிபதி இல்லத்தில் ஆஜர்படுத்தினர். விமானப்படை அலுவலர் என்பதால் இந்த வழக்கை மாநகர காவல் துறையினர் விசாரிக்க இயலாது என அமிதேஷ் தரப்பு வழக்கறிஞர் நீதிபதியிடம் மனு தாக்கல் செய்தார்.
இதையடுத்து, இந்திய விமானப்படை சட்டம் 1950-இன்படி மாநில காவல்துறை, விமானப்படை அலுவலரை காவலில் எடுத்து விசாரிக்க முடியாது என்பதால் அமிதேஷை இந்திய விமானப்படை வசம் ஒப்படைக்க கோயம்புத்தூர் கூடுதல் மகளிர் நீதிமன்றம் கடந்த 30ஆம் தேதி உத்தரவிட்டது.
ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்
முன்னதாக, முதல் தகவல் அறிக்கையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட இரு-விரல் பரிசோதனை விமானப்படை மருத்துவர்களால் மேற்கொள்ளப்பட்டது என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், இந்தப் பரிசோதனை மேற்கொண்டதற்கு தேசிய பெண்கள் ஆணையம் கடும் கண்டனத்தைப் பதிவு செய்தது.
இந்நிலையில், இதுகுறித்து விமானப்படை தலைமை தளபதி விவேக் ராம் சௌத்ரி இன்று (அக். 5) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"கோயம்புத்தூரில் பெண் விமானப்படை அலுவலருக்கு இரு-விரல் பரிசோதனை நடத்தப்படவில்லை. இந்த வழக்கு விசாரணையில் குற்றவாளிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: பெண் ஐஏஎஃப் அலுவலர் பாலியல் வன்கொடுமை விவகாரம்: கைதானவர் விமானப்படையிடம் ஒப்படைப்பு