பெங்களூரு : முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான ஹெச்.டி.தேவகவுடா, தங்கள் கட்சி, எந்தக் கூட்டணியிலும் சேரும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறி உள்ளார்.
ஜூலை 21ஆம் தேதி, பத்திரிகையாளர்களைச் சந்தித்த தேவகவுடா கூறியதாவது, "நாங்கள் ஒரு பிராந்தியக் கட்சி. இந்த பிராந்தியக் கட்சியைக் காப்பாற்ற சட்டமன்ற உறுப்பினர்களுடன் நான் விவாதித்தேன். சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்து, கட்சியை முன்னோக்கிச் செல்லும் வழியிலான ஆலோசனைகளை வழங்கியுள்ளேன்" என்று தெரிவித்து உள்ளார். இந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம், 20ஆம் தேதி இரவு துவங்கி, 21ஆம் தேதி இரவு வரை நீடித்தது குறிப்பிடத்தக்கது.
நான் எனது அனுபவத்தை, கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் உடன் பகிர்ந்து கொண்டேன். மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவர் குமாரசாமியே ஆவார். அவருக்குக் கட்சியை வழிநடத்தும் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. நான் எனது அனுபவத்தைக் குமாரசாமியிடமும் வழங்கி உள்ளேன். கட்சியின் வளர்ச்சிக்குத் தேவையான. அனைத்து ஆலோசனைகளையும் வழங்க நான் தயாராக உள்ளேன். கூட்டணி குறித்த கேள்விக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒரு பக்கம் என்றால், இந்தியா மறுபுறம் என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.
முன்னதாக, கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி, பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு ஐஏஎஸ் அதிகாரிகளைப் பயன்படுத்தியதற்கு எதிராக ட்வீட் செய்து இருந்தார். இது தொடர்பாகச் சட்டப்பேரவையில் பாஜக தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். மக்களவையில் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்கள் அதிகரித்துள்ளது. இதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. கர்நாடக சட்டப்பேரவை கூட்டத்தொடரை பாஜக புறக்கணித்த நிலையில், குமாரசாமியும் பாஜகவைப் பின்பற்றி, இந்த கூட்டத்தொடரைப் புறக்கணித்து உள்ளார்.இதற்காக, பா.ஜ., - ஜே.டி.எஸ்., இணையும் என, யாரோ கதை கட்டி, உறவை ஏற்படுத்தக் கூடாது,'' தேவகவுடா விளக்கம் அளித்து உள்ளார்.
''தேசிய அரசியலை நான் நன்கு அறிவேன். கர்நாடக மக்களின் நலன் கருதி இந்த பிராந்திய கட்சியை காப்பாற்றுவது மிகவும் அவசியம் ஆகும். நான் அரசியல் ஆதாயத்திற்காக பேசவில்லை. என் வாழ்நாள் முழுவதும் போராடி இருக்கிறேன். தேசிய ஜனநாயகக் கூட்டணியுடனோ அல்லது இந்தியாவுடனோ (காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி) நாங்கள் கூட்டணி அமைக்கப் போவது இல்லை. நாங்கள் தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளதாக'' என்று தேவகவுடா தெரிவித்து உள்ளார்.
பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) மத்தியில் ஆட்சியில் உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியை அகற்ற 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உள்ளன. சமீபத்தில் பெங்களூருவில் நடந்த கூட்டத்தில், இந்த கூட்டணிக்கு INDIA என பெயரிட முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.