மகாராஷ்டிரா அரசின் உள் துறை அமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அனில் தேஷ்முக் உள்ளார். இவர் மீது மும்பை காவல் ஆணையராக இருந்த பரம்பீர் சிங் மாபெரும் குற்றச்சாட்டை வைத்தார்.
பரம்பீர் சிங் அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எழுதிய எட்டு பக்க கடிதத்தில், மாதந்தோறும் நூறு கோடி ரூபாய் வசூல்செய்து தன்னிடம் கொடுக்கும்படி உள் துறை அமைச்சர் அனில் தேஷ்முக் வற்புறுத்தியதாகவும், தான் பலிகடா ஆக்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதையடுத்து, அனில் தேஷ்முக் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுத்துவருகின்றன. இவ்விவகாரம் தொடர்பாக, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தனது கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் மூன்று மணிநேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் மூத்தத் தலைவர் ஜெயந்த் பாட்டில், "இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் திசைதிருப்புகின்றனர். உரிய விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், அனில் தேஷ்முக்கை ராஜினாமா செய்ய சொல்வது முறையற்றது. அவர் ராஜினாமா செய்யப்போவதில்லை" எனத் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க: உலகில் யாரும் கண்டிராத ராட்சத பூட்டு: ஆச்சரியமூட்டும் வயது முதிர்ந்த தம்பதியின் உழைப்பு!