பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் தனியார் ஊடகத்துக்கு, மத்திய அமைச்சர் அமித்ஷா அளித்த பேட்டியில், "அந்நிய மண்ணில் இந்தியாவுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டப்பட்டால் அதுபற்றி விசாரிக்கும் அளவுக்கு என்ஐஏ திறன் படைத்துள்ளது. அண்மையில் லண்டனில் இந்திய தூதரகம் தாக்கப்பட்டது தொடர்பாக டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்திய தூதரகத்திடம் இருந்து அறிக்கையும் பெறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமையிடம் (NIA) ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்திய தூதரகங்கள் தாக்கப்படுவதை பாஜக தலைமையிலான மத்திய அரசு ஒருபோதும் ஏற்காது. இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது இந்திய சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பஞ்சாப் மாநிலத்தில் தற்போது காலிஸ்தான் தனி நாடு கோரிக்கை தொடர்பான எந்த அலையும் இல்லை. மத்திய, மாநில அரசுகள் இவ்விவகாரத்தை சிறப்பாக கையாண்டுள்ளன. அங்குள்ள நிலவரத்தை மத்திய அரசு கூர்ந்து கவனித்து வருகிறது. இந்தியாவின் ஒற்றுமை மற்றும் இறையாண்மையை யாராலும் தாக்க முடியாது.
காலிஸ்தான் தனி நாடு கோரிக்கையை முன்வைத்து பிரச்னையை கிளப்பும் அம்ரித்பால் சிங் எப்போது வேண்டுமானாலும் பிடிபடலாம். அண்மையில் அவர் சுதந்திரமாக வெளியே சுற்றித்திரிந்த நிலையில், தற்போது தலைமறைவாகிவிட்டார்" என கூறினார்.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த அம்ரித்பால் சிங், காலிஸ்தான் தனி நாடு கோரிக்கையை முன்னெடுத்தார். அவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதால் போலீசார் தேடி வந்த நிலையில், தலைமறைவாகியுள்ளார். இதற்கிடையே கடந்த மார்ச் 19ம் தேதி லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் தாக்குதல் நடத்தினர். இதேபோல், அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய தூதரகத்திலும், காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: லீக்கான பிரதமர் மோடியின் பாதுகாப்பு அறிக்கை - உளவுத்துறை அதிரடி விசாரணை!