ஹரியானா மாநில சட்டப்பேரவையில் பேசிய அம்மாநில சுகாதாரத்வ துறை அமைச்சர் அனில் விஜ், நேற்று (ஆகஸ்ட் 20) வரை ஒன்பதாயிரத்து 665 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்தார். அப்போது காங்கிரஸ் எம்எல்ஏ அஃதப் அஹ்மத் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதா எனக் கேள்வி எழுப்பிய நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை என பதிலளித்தார்.
இதனைத்தொடர்ந்து மார்ச் 2020 முதல் ஜூலை 31 வரை மாவட்ட வாரியாக ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த தகவல்களை அரசு வெளியிட வேண்டும் என அஃதப் அஹ்மத் தெரிவித்தார். கரோனா தொற்று காலத்தில் ஆக்சிஜன் இல்லாததால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கையையும் கேட்டார்.
இதையடுத்து கேள்வி நேரத்தில் பேசிய முதலமைச்சர் மனோகர் லால் கட்டார், இதுவரை ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஹரியானா மாநிலத்தில் யாரும் உயிரிழக்கவில்லை எனத் தெரிவித்தார். அ்ப்போது பேசிய காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் முதலமைச்சருமான பூபேந்தர் சிங் ஹூடா, மாநில அரசு ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட உயிரிழப்புகளை மறைப்பதாகத் தெரிவித்தார்.
இது குறித்து பேசிய அவர், "உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறித்த முழுத் தகவலையும் பெற அரசு உயர்மட்ட குழு ஒன்றை அமைக்க வேண்டும். முதல், இரண்டாம் அலைகளின்போது என்ன பாடத்தை கற்றுக்கொண்டது என்பது குறித்து அரசு தெரிவிக்க வேண்டும். மூன்றாம் அலை வந்துவிட்டால், அதைச் சமாளிக்க நம்மிடம் எத்தனை மருத்துவர்கள், பணியாளர்கள் உள்ளனர்" என்று வினவினார்.
கரோனா இரண்டாம் அலையின்போது தடையின்றி ஆக்சிஜன் கிடைக்கப் போதுமான வசதிகள் செய்யப்பட்டதாக முதலமைச்சர் பதிலளித்தார். தொற்று காலத்தில் தங்களின் கடமையை முழுமையாக நிறைவேற்றியதாகவும் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: மோடி அரசுக்கு எதிராக ஒன்று திரள்வோம் - சீதாராம் யெச்சூரி