புவனேஷ்வர்: மாநிலத்தில் பறவைக் காய்ச்சலைத் தடுக்க விரைந்து செயல்படும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
ஒடிசாவில் இதுவரை 11,000 பறவைகளின் மாதிரிகள் சோதனை செய்ததில், ஒன்றில்கூட பறவைக் காய்ச்சலுக்கான நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்படவில்லை என மாநிலச் செயலாளர் எஸ்.சி. மொஹபத்ரா தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “சிலிக்கா ஏரி போன்ற பல்வேறு பறவை சரணாலயங்களிலிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இந்த ஆண்டு மொத்தமாக 11.42 லட்சத்துக்கும் மேற்பட்ட பறவைகள் இங்கு வருகை தந்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பித்தர்கானிகா தேசிய பூங்காவில் 97,866 பறவைகளும், ஹிராகுட் அணை பகுதியில் 1.60 லட்சம் பறவைகளுக்கான வருகையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது. அதே வேளையில், பறவை காய்ச்சல் ஏற்படக்கூடிய நோய்களை எதிர்கொள்வதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.
பொதுவாக இடம்பெயரும் பறவைகள்தான், பறவை காய்ச்சலின் பரப்பிகள் என்று மீன்வள மற்றும் விலங்கு வள மேம்பாட்டுச் செயலாளர் ரகு பிரசாத் தெரிவித்துள்ளார். எனவே, அரசு மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் புலம்பெயர்ந்த பறவைகள் அதிகம் கூடும் இடங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார்.