டெல்லி: மாநில முதலமைச்சர்கள், நிதியமைச்சர்களுடன் கரோனா தொற்று இரண்டாம் அலைக்குப் பின்னான பொருளாதார நிலை குறித்து ஆலோசிக்க நேற்று (நவம்பர் 15) காணொலி வாயிலாகக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Union Finance minister Nirmala Sitharaman) தலைமை வகித்தார். 15 மாநிலங்களின் முதலமைச்சர்கள், மூன்று துணை முதலமைச்சர்கள், ஜம்மு காஷ்மீரின் துணைநிலை ஆளுநர், மற்ற மாநிலங்களின் நிதியமைச்சர்கள் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். ஆறு மணிநேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
மாநிலங்கள் புரிந்துகொள்ள வேண்டும்
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளரைச் சந்தித்த நிர்மலா சீதாராமன், "கரோனா தொற்று இரண்டாவது அலைக்குப் பின்னர் நாம் ஒரு வலுவான வளர்ச்சியைக் கண்டுள்ளோம் என்பதைத் தெரிவிக்கதான் இந்தக் கூட்டம்.
எப்படியாவது இந்த வளர்ச்சியைத் தக்கவைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நாங்கள் செயல்படுகிறோம். இரட்டை இலக்க வளர்ச்சிக்கு, முடிந்தவரை நெருக்கமாக எடுத்துச் செல்ல மாநில அரசுகளும், மத்திய அரசும் இணைந்து செயல்படும்
முதலீடு, வளர்ச்சி, உற்பத்தி நடவடிக்கைகள் தொடர்பான பெரும்பாலான விவகாரங்களில், மாநிலங்கள்தாம் முன்னணியில் உள்ளன. மாநிலங்களுக்கு, மத்திய அரசின் ஆதரவு எப்போதும் இருக்கும்.
ஆனால், பிரச்சினைகள் குறித்து மாநிலங்கள் விவாதிக்க விரும்புவதைக் கேட்க நாங்கள் தயாராக உள்ளோம் என்பதை மாநில அரசுகள் புரிந்துகொள்ள வேண்டும். அதற்காகவே இந்தக் கூட்டத்திற்கு அழைப்புவிடுக்கப்பட்டது" என்றார்.
நிதி இரட்டிப்பாக்கப்படும்
முன்னதாக, ஜிஎஸ்டி வரி வருவாயிலிருந்து (GST revenue) இந்த மாதம் கூடுதலாகப் பகிர்ந்தளிக்கப்படும் நிதியை அதிகப்படுத்த வேண்டும் என பல்வேறு மாநிலங்கள் கோரிக்கைவைத்திருந்தன. இதைச் சுட்டிக்காட்டி பேசிய நிர்மலா சீதாராமன், "மாநிலங்களின் கோரிக்கையை ஏற்குமாறு நிதிச் செயலருக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்தாண்டு ஒரு விதிவிலக்கான ஆண்டு. எந்த மாநிலங்களும் நிதிப் பற்றாக்குறையுடன் இருக்கக் கூடாது" என்றார்.
மேலும் பேசிய அவர், "நவம்பர் மாதத் தவணையாக வரும் 22ஆம் தேதி, வழக்கமாக மத்திய அரசால் பகிர்ந்தளிக்கப்படும் ரூ. 47,541 கோடி நிதியை இரட்டிப்பாக்கி, 95,082 கோடி ரூபாய் மாநிலங்களுக்கு அளிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
கூட்டத்தின் இறுதியில், "இது மிகவும் அரிதான சூழ்நிலை, அதனால்தான் இந்தச் சந்திப்பு நடந்தது. இதற்கு முன்பு இதுபோன்ற சந்திப்பு நடந்ததில்லை. வளர்ச்சி, அதற்கான செயலாக்கம் குறித்து மாநிலங்களுக்கு என்று தனி கருத்துகள் இருக்கின்றன.
இது அரிய சந்திப்பு
அது குறித்து விவாதிக்க இந்தக் கூட்டம் ஏற்பாடுசெய்யப்பட்டது. இது ஒரு அரிய சந்திப்பு. இதுபோன்று மீண்டும் நிகழுமா என்பதைச் சொல்ல முடியாது. ஏனென்றால் அதற்கான தேவை இருக்காது என்று நினைக்கிறேன்" என்கிறார் நிர்மலா சீதாராமன்.
அடுத்து பேசிய நிதிச் செயலர் டி.வி. சோமநாதன், நடப்பு நிதியாண்டில் அக்டோபர் மாதம் வரை நான்கு மாநிலங்கள் மட்டுமே நிதிப்பற்றாக்குறையில் இருப்பதாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: Delhi air pollution: மாநிலங்களுடன் ஒன்றிய அரசு அவசரக் கூட்டம்