டெல்லி: டெல்லியில் நேற்று(ஆகஸ்ட் 1) நடந்த மக்களவை கூட்டத்தில் விலைவாசி உயர்வு குறித்த விவாதம் நடந்தது. அப்போது எதிர்கட்சிகளின் கேள்விக்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘இந்திய பொருளாதாரத்தில் எந்த ஒரு தேக்க நிலையும் ஏற்படவில்லை எனவும், உலக அளவில் இந்தியா பொருளாதாரத்தில் அதிவேகமாக வளர்ந்து வருகிறது” என கூறினார். ஆனால் இந்த பதில் திருப்தியாக இல்லை என காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலர் வெளிநடப்பு செய்தனர்.
மேலும் இது குறித்து பேசிய நிர்மலா சீதாராமன், ‘கரோனா தொற்றால் ஊரடங்கு, பல நெருக்கடிகள் என அனைத்திற்கும் இடையில் இந்திய பணவீக்கம் 7 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தது. இது அனைவராலும் அங்கீகரிக்கப்பட வேண்டும்’ என தெரிவித்தார்.
"தற்போது சில்லறை பணவீக்கம் 7 சதவீதமாக உள்ளது. 2004 முதல் 2014 வரையிலான ஆட்சியில், இந்தியாவின் பணவீக்கம் இரட்டை இலக்கத்திற்கு சென்றது. அந்த காலகட்டத்தில், தொடர்ந்து 22 மாதங்களுக்கு பணவீக்கம் 9 சதவீதத்திற்கு மேல் இருந்தது" என்று அவர் கூறினார். பணவீக்கத்தின் பெரும்பகுதி உணவு மற்றும் எரிபொருளில் உள்ளது. "உலகளவில் உணவுப் பொருள்கள் மீதான பணவீக்கம் குறைந்து வருகிறது, இந்தியாவிலும் அது குறையும்," என்று கூறினார்.
மற்ற நாடுகளை விட இந்தியா இன்னும் சிறப்பாக உள்ளது. பொருளாதாரத்தின் முதல் காலாண்டில் 1.9 சதவீதமாக இருந்த அமெரிக்காவின் ஜிடிபி இரண்டாவது காலாண்டில் 0.7 சதவீதம் சரிந்தது. "அவர்கள் இதை அதிகாரப்பூர்வமற்ற பொருளாதார மந்தநிலை என்று அழைத்தனர். இந்திய பொருளாதாரம் மந்த நிலை அடைவதற்கு எந்த அறிகுறியும் இல்லை. பொருளாதார நிபுணர்களின் ப்ளூம்பெர்க் கருத்துக்கணிப்பின் படி இந்தியாவின் பொருளாதாரம் மந்தநிலை அடைவதற்கு 0 சதவீதம் சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது’ என கூறினார்.
GST வசூல் அதிகம்: பொருளாதாரத்தின் மற்ற அளவுகளை மேற்கோள்காட்டி, "வணிக வங்கிகளின் NPA (செயல்படாத சொத்துகள்) ஆறு ஆண்டுகளில் குறைந்த அளவிலேயே உள்ளது. GST வசூல் 5 மாதங்களாக தொடர்ந்து ₹ 1.4 லட்சம் கோடிக்கு மேல் உள்ளது" என்றார்.
விலைவாசி உயர்வு குறித்து விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்ததால், 10 நாட்களாக நாடாளுமன்றத்தில் அமளி நிலவியதை அடுத்து, தற்போது நிதியமைச்சர் பதில் அளித்துள்ளார். இதற்கிடையே, நிதி அமைச்சரின் உரையை புறக்கணித்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தது.
இதையும் படிங்க:73-வது நாளாக சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை!