சோனிபட்: டெல்லி-ஹரியானா மாநில எல்லைப் பகுதியான சிங்குவில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் ஓராண்டுக்கும் மேலாக போராட்டம் நடத்திவருகின்றனர்.
இந்தப் பகுதியில் நேற்று (அக். 15) காலை கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்டு பாரிகேட்டில் கட்டி தொங்கவிடப்பட்டிருந்த ஒரு நபரின் உடல் காணப்பட்டது. இதையடுத்து, நிஹாங் குழுவைச் சேர்ந்த சரப்ஜீத் சிங் என்பவர் ஒருவர் சரணடைந்துள்ளார்.
சீக்கிய மதநூலை அவமதித்தாரா?
இந்நிலையில், விவசாய அமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "சிங்கு பகுதியில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த லக்பிர் சிங் என்பவர் உடல் சிதைக்கப்பட்டு, கொடூரமாகக் கொலைச்செய்யப்பட்டார் என்ற தகவல் எங்களுக்குத் தெரியவந்தது.
இந்தச் சம்பவத்திற்கு நிஹாங் குழு பொறுப்பேற்றுள்ளது. உயிரிழந்தவர் சீக்கிய மதநூலை அவமதித்ததால் அவர் கொலைசெய்யப்பட்டார் என்று கூறப்படும் நிலையில், அவர் நிஹாங் குழுவில் சில காலம் இருந்தார் எனவும் கூறப்படுகிறது.
சர்ச்சைகளைக் களைய வேண்டும்
சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பு இந்தக் கொடூர கொலையைக் கண்டிக்கிறது. மேலும், உயிரிழந்தவர், நிஹாங் குழு ஆகிய இருதரப்புக்கும் எங்களுக்கும் எவ்வித தொடர்புமில்லை என்பதைத் தெளிவுப்படுத்த விரும்புகிறோம்.
மதநூல்களை அல்லது மத அடையாளங்களை அவமதிக்கும் செயல்களை எங்கள் அமைப்பு என்றும் ஏற்றுக்கொள்ளாது, எனினும் அதற்காகச் சட்டத்தை கையிலெடுப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.
இந்தக் குற்றத்தில் தொடர்புடையவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, இதில் உள்ள சர்ச்சைகள் குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் வழக்கம்போல், சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பு காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பை அளிக்கும்.
அமைதி மற்றும் ஜனநாயகப்பூர்வமான இந்த இயக்கமானது, வன்முறை எந்த வடிவில் இருந்தாலும் அதை எதிர்க்கும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஊர்வலத்தில் கார் புகுந்து 4 பேர் உயிரிழப்பு; தசரா விழாவில் கொடூரம்