டெல்லி: காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டியது உள்பட அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், கடந்த 19ஆம் தேதி தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றம் யாசின் மாலிக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்துள்ளது. தண்டனை விவரங்கள் இன்று (மே 25) அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்ட நிலையில், யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
யாசின் மாலிக் மீது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு சதித்திட்டம் தீட்டுதல், நாட்டுக்கு எதிராக செயல்படுதல், சட்ட விரோத செயல்கள், காஷ்மீரில் அமைதியை சீர்குலைத்தல் போன்ற குற்றச்சாட்டுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
குற்றத்தை ஒப்புக்கொண்ட யாசின் மாலிக், விசாரணை நிறைவு நாளில், அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் அரசியலமைப்பு சட்டப் பிரிவு 16 (பயங்கரவாத சட்டம்), 17 (பயங்கரவாத செயலுக்கு நிதி திரட்டுதல்), 18 (பயங்கரவாத செயலுக்கு சதி செய்தல்), 20 (பயங்கரவாத கும்பல் அல்லது அமைப்பின் உறுப்பினராக இருப்பது) உஃபா மற்றும் பிரிவுகள் 120-பி (குற்றச் சதி) மற்றும் 124-ஏ (தேச துரோகம்) ஆகியவற்றை எதிர்த்து வாதாடப்போவதில்லை என்று நீதிமன்றத்தில் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து, அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, இன்று நீதிமன்றம் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
முன்னதாக இன்று யாசின் மாலிக்கிற்கு தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படுவதையொட்டி, ஸ்ரீநகரின் பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. சாலைகளில் குறைந்த அளவு மக்கள் நடமாட்டம் காணப்பட்டது. இருப்பினும், கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்பட்டன.
இதையும் படிங்க: பயங்கரவாத இயக்கத்திடமிருந்து நிதியுதவி பெற்றதாக புனே இளைஞர் கைது!