டெல்லி: இந்திய அரசுக்கு எதிராக செயல்படுவதற்கு நியூஸ்கிளிக் (NewsClick), சீனாவிடம் நிதி உதவி பெறுவதாக நியூயார்க் டைம்ஸ் (New York Times) தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், நேற்று (அக்.3) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் இல்லத்தில் டெல்லி சிறப்புப் பிரிவு காவல் துறையினர், இதில் அவருக்குத் தொடர்பு உள்ளதா என சோதனை நடத்தினர்.
மேலும், நியூஸ்கிளிக் (NewsClick) தொடர்புடைய 30க்கும் மேற்பட்ட இடங்களில் டெல்லி சிறப்புப் பிரிவு காவல் துறையினர் சோதனை செய்ததோடு மட்டும் அல்லாமல், நியூஸ்கிளிக் (NewsClick) நிறுவனத்தின் பத்திரிகையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தியது. இதனை அடுத்து, இந்த நடவடிக்கைகளுக்கு இந்திய பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து டெல்லி காவல் துறையினர் தரப்பில், டெல்லியில் இயங்கி வரும் நியூஸ் கிளிக் என்ற தனியார் செய்தி நிறுவனத்தின் இணையதளத்தில் தொடர்புடைய செய்தியாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் வீடுகளில் நேற்று (அக் 03) காலை முதல் டெல்லி காவல் துறையினரின் சிறப்புப் பிரிவு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டிருந்ததாகவும், மேலும் ஆதாரங்கள் அடிப்படையிலேயே இந்த சோதனைகள் நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், இதில் ஒரு சில எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் செல்போன் மற்றும் லேப்டாப்கள் சோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக சீனாவிடம் இந்நிறுவனம் நிதி பெற்று இந்திய அரசுக்கு எதிராக செய்திகளை வெளியிடுவதாக வந்த தகவலின் அடிப்படையில், இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதன் ஒரு பகுதியாக, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் மற்றும் பிற பிரிவுகளின் கீழ் நியூஸ் கிளிக் நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை ஆசிரியருமான பிரபீர் புர்கயஸ்தா அலுவலகங்களில் சோதனை மற்றும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, நியூஸ் கிளிக் அலுவலகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், நியூஸ் கிளிக் நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை ஆசிரியருமான பிரபீர் புர்கயஸ்தா மற்றும் இந்நிறுவனத்தின் மனிதவள மேலாளர் அமித் சக்ரவர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டு, ஏழு நாட்கள் போலீஸ் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: "தமிழகத்தில் கோயில்களை மாநில அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அநியாயம்" - பிரதமர் மோடி