புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "புதுச்சேரியில் கரோனா பரவலைத் தடுக்க ஆளுநர் தலைமையில் உயர்நிலைக் குழுக் கூட்டத்தைக் கூட்டி அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
இந்தக் கட்டுப்பாடுகள் கடந்த 26ஆம் தேதிமுதல் வரும் 30ஆம் தேதிவரை அமலில் இருக்கும். தினசரி இரவு 10 மணிமுதல் காலை 5 மணிவரை பொதுமுடக்கம் செயல்பாட்டில் உள்ளது.
இதில் மளிகைக் கடை, காய்கறிக் கடை, உணவகங்கள், இறைச்சிக் கடைகள் இயங்கலாம். பெரிய கடைகள், வணிக வளாகங்கள், மால்கள் இயங்க அனுமதியில்லை.
உணவகங்களில் பார்சல் மட்டும் வழங்க வேண்டும், அமர்ந்து சாப்பிட அனுமதியில்லை. மத வழிபாட்டுத் தலங்களில் பொது வழிபாடுக்கு அனுமதி கிடையாது. கோயில்களில் திருவிழாக்களுக்கு அனுமதியில்லை.
திருமண நிகழ்ச்சியில் 50 நபர்கள், இறுதிச் சடங்கில் 25 பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும். தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் இயங்கலாம். பெட்ரோல் சேமிப்பு நிலையம், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், ஏடிஎம், தொலைதொடர்பு, இணையதள சேவை உள்ளிட்டவை இயங்கலாம்.
அத்தியாவசிய தேவைகளுக்குச் செல்வோர், உரிய அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் செல்ல வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: மாநில அரசுகள் சுகாதார கட்டமைப்பு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்!