பெங்களூரு: கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா தலைமையில், முதல் முறையாக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சி அளித்த தேர்தல் வாக்குறுதிகளில், 5 வாக்குறுதிகளை நிறைவேற்ற இந்த கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்து உள்ளார்.
கர்நாடகா மாநில முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்ற பிறகு, விதான் சவுதாவில் நடைபெற்ற முதல் பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது, "5 வாக்குறுதிகளை அமல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது, திட்டங்களுக்கு எவ்வளவு பணம் தேவைப்பட்டாலும், நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை செயல்படுத்துவோம். க்ருஹ ஜோதி திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு மாதம் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்க உள்ளோம்.
இந்த திட்டத்திற்காக, அரசுக்கு மாதம் அதற்கு சுமார் 1,200 கோடி ரூபாய் செலவாகும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அதேபோல், விலைவாசி உயர்வால் தத்தளிக்கும், குடும்பத் தலைவிகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் பொருட்டு, க்ருஹலக்ஷ்மி திட்டத்தின் கீழ் அவர்களுக்கு ரூ.2,000 வழங்கப்பட உள்ளது.
இஞ்ஜினியர்கள் முதல் மருத்துவர் படிப்பு படித்து உள்ள வேலையில்லா பட்டதாரிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு ரூ.2,000யும், டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.1,500 வழங்கப்படும். கர்நாடகாவை சேர்ந்த அனைத்து பெண்களுக்கும் பஸ் பாஸ் வழங்கப்படும். சொகுசு வாகனங்கள் தவிர அனைத்து அரசு போக்குவரத்து வாகனங்களிலும் அவர்கள் இலவசமாக பயணம் செய்யலாம் உள்ளிட்ட வாக்குறுதிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.
இதற்கான விரிவான விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு, பணம் எவ்வளவு தேவைப்பட்டாலும், அதைப்பற்றி சிந்திக்காது, வாக்குறுதிகளை நிறைவேற்ற உள்ளதாக" அவர் தெரிவித்து உள்ளார். இந்த திட்டங்களின் மூலம் பயன் பெற உள்ள பயனாளிகள் குறித்த விபரங்களை திரட்ட, சிறிது கால அவகாசம் தேவைப்ப்டுவதாக, துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தெரிவித்து உள்ளார்.
ஏழைகளுக்கு மானிய விலையில் உணவு வழங்குவதற்காக மாநிலம் முழுவதும் இந்திரா கேன்டீன்களை மீண்டும் தொடங்க உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்து உள்ள சித்தராமையா, வரும் திங்கள்கிழமை (மே 22) முதல் 3 நாள் சட்டமன்றக் கூட்டத் தொடருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான கோரிக்கை ஆளுநர் தாவர் சந்த் கெலாட்டுக்கு அனுப்பப்பட உள்ளதாக தெரிவித்தார்.
இந்த சட்டசபை கூட்டத்திற்கு, கட்சி மூத்த தலைவர் ஆர்.வி. தேஷ்பாண்டே தற்காலிக சபாநாயகராக செயல்படுவார். புதிய சபாநாயகர், இந்த கூட்டத்தொடரில் அமர்வில் அறிவிக்கப்படுவார். இந்த ஆண்டு, கர்நாடகாவிற்கு, மத்திய அரசிடம் இருந்து 50 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, மத்திய அரசு, கர்நாடகாவிற்கு, அநீதி இழைத்து வருகிறது. கர்நாடக அரசு, மத்திய அரசிற்கு, 4 லட்சம் கோடி வரியாக செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போதே, கட்சி மூத்த தலைவர் ராகுல் காந்தி, "பெண்களுக்கு இலவச பஸ் பயணம், வேலையில்லா பட்டதாரிகளுக்கு நிதியுதவி, இலவச மின்சாரம், உள்ளிட்ட 5 வாக்குறுதிகள் முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே ஒப்புதல் அளிக்கப்படும்" என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்பு.. விழாக் கோலம் பூண்ட கர்நாடகா!