ஐதராபாத் : மெட்டா தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் பயன்படுத்தும் செல்போன் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
சினிமா பிரபலங்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், பெரும் செல்வந்தர்கள், பெரு நிறுவனங்களில் உயர் பதவிகளில் இருக்கும் முக்கிய புள்ளிகள் என்னென்ன பழக்க வழக்கங்களை கடைபிடிக்கிறார்கள் என்பதை அவர்களை போல் மாற துடிக்கும் சாமானிய மக்கள் தெரிந்து கொள்ள விருப்பம் காட்டுவது மிக வழக்கம்.
அதேநேரம் மேற்கொண்ட நபர்கள் தங்களை ஸ்மார்ட்டாக காட்டிக் கொள்ள எப்படிப்பட்ட கேட்ஜெட்ஸ்கள், மின்னணு சாதனங்களை பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிந்து கொள்வது என்பது பெரும்பாலனவர்களுக்கும் கொள்ளை பிரியம் என்றால் அது மிகையாகாது. இதற்கு முன் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் பயன்படுத்தும் செல்போன் குறித்து சமூக வலைதளங்களில் பெரும் வாதமே நடைபெற்றது.
அதேபோல் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை பயன்படுத்தும் செல்போன் குறித்தும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்களில் கருத்து போர் நடத்தப்பட்டது. அதன் பின் சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தின் பிக்செல் செல்போனை பயன்படுத்துகிறார் என்ற ரகசியம் வெளிவந்ததை அடுத்து அவரை பின் தொடர்பவர்கள் நிம்மதி பெருமூச்சு விடத் தொடங்கினர்.
அந்த வகையில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், தற்போது திரட்ஸ் என சமூக வலைதளங்களில் பெரும் பகுதியை தன் பக்கம் வைத்து இருக்கும் மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் பயன்படுத்தும் செல்போன் குறித்து தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.
காரணம், அண்மையில் மார்க் ஜுக்கர்பெர்க் வெளியிட்ட பதிவு தான். அண்மையில் தன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில் 13 இமெயில்களை சரிபார்த்துக் கொண்டு இருக்கிறேன்" என பதிவிட்டு இருந்தார். இந்த புகைப்படம் வெளியான நிலையில், பலரும் மார்க் ஜுக்கர்பெர்க் பயன்படுத்தும் செல்போன் குறித்து அறிய ஆவலாகி உள்ளனர்.
இதனால், சமூக வலைதலங்களில் பெரும் கருத்து கணிப்பே நடைபெற்று வருகிறது. ஒரு தரப்பினர் மார்க் ஐபோன் பயன்படுத்துகிறார் என்றும் மற்றொரு தரப்பினர் ஆண்ட்ராய்டு என்றும் கமெண்டகளை பதிவிட்டு வருகின்றனர். அதேநேரம் ஆண்ட்ராய்டு போன் என்றால் என்ன மாடல், எந்த பிராண்ட் என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஒரு தரப்பினர் அதற்கும் மேல் சென்று, மார்க் ஜுக்கர்பர்க் சாம்சங் நிறுவனத்தின் செல்போனை பயன்படுத்துகிறார் என்றும் அவர் சாம்சங் கேலக்சி எஸ்.21 அல்லது எஸ்.22 (Samsung Galaxy S21 or S22 series.) சீரீஸ் செல்போன்களை பயன்படுத்தலாம் என்றும் நெட்டிசன்களை கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
இதற்கு முன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த மார்க் ஜுக்கர்பெர்க், தனக்கு ஆண்ட்ராய்டு செல்போன்கள் என்றால் பிடிக்கும் என்றும் குறிப்பாக சாம்சாங் பிராண்டின் செல்போன்களை நீண்ட நாட்களாக பயன்படுத்தியதாகவும் தெரிவித்தார். சாம்சாங் நிறுவனத்தின் மிகப் பெரிய ரசிகன் தான் என்றும் அந்த பேட்டியில் மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை.. முறைகேடு வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு!