ஹாங்சோ: 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான டி20 கிரிக்கெட் போட்டியில் நேபாளம் அணி - மங்கோலியாவை எதிர்கொண்டது. டாஸ் வென்ற மங்கோலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி நேபாள அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான குஷால் புர்டெல், ஆசிப் ஷேக் ஆகிய இருவரும் 19 மற்றும் 16 ரன்களில் தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்து பெவிலியன் திருப்பினர்.
இதனை அடுத்து களம் இறங்கிய குஷல் மல்லா ரூத்ர தாண்டவம் ஆடி மங்கோலியா அணியினரின் பந்து வீச்சை விளாசி தள்ளினார். சிக்ஸருக்கும், பவுண்டரிக்குமாக பறக்க விட்ட அவர் 34 பந்துகளில் 100 ரன்களை கடந்து புது சாதனை படைத்தார். தொடர்ந்து ஆடிய அவர் 50 பந்துகளில் 12 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 137 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து களம் கண்ட திபேந்திர சிங் ஐரி முரட்டுத்தனமாக ஆடி மாஸ் காட்டினார். 10 பந்துகளை சந்தித்த அவர், அதில் 9 பந்துகளில் 8 சிக்ஸர்கள் அடித்து அரை சதம் கடந்து அசத்தினார். இருவரின் அபார ஆட்டத்தில் 3 விக்கெட் இழப்பிற்கு நேபாள அணி 314 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 315 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை எதிர்கொண்டு களம் இறங்கிய மங்கோலிய அணி, நேபாள வீரர்களின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது.
அந்த அணி 13.1 ஓவர்களில் 41 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து. இதனால் 273 ரன்கள் வித்தியாசத்தில் நேபாள அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டி கிரிக்கெட் உலகில் பல்வேறு சாதனைகள் முறியடித்து புது உலக சாதனையை படைத்தது.
நேபாள அனி படைத்த சாதனைகள் :
- டி20 போட்டியில் 9 பந்துகளில் அரைசதம் விளாசியதன் மூலம் இந்தியா வீரர் யுவராஜ் சிங்கின் (12 பந்துகளில் அரை சதம்) 16 ஆண்டுகால சாதனையை நேபாள வீரர் தீபேந்திர சிங் முறியடித்தார்.
- சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் 300 ரன்கள் குவித்த முதல் அணி என்ற சாதனையை படைத்தது நேபாளம் (314/3). இதற்கு முன்னதாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணி கடந்த 2019 ஆம் ஆண்டு அயர்லாந்து அணிக்கு எதிராக குவித்த 278 ரன்கள் தான் ஒரு அணி எடுத்த அதிகபட்ச ரன்களாக இருந்தது.
- அதிவேகமாக சதமடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார் குஷல் மல்லா (34 பந்துகளில் சதம்). இதற்கு முன்னர் ரோகித் சர்மா மற்றும் டேவிட் மில்லர் 35 பந்துகளில் சதம் பதிவு செய்திருந்தனர்.
- மங்கோலியா 273 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற நிலையில், டி20 போட்டியில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற பெருமையையும் நேபாளம் பெற்றது.
இதையும் படிங்க : IND VS AUS 3rd ODI : தொடரை வெல்லுமா இந்தியா? தாக்குபிடிக்குமா ஆஸ்திரேலியா?