அமாராவதி: ஆந்திரப் பிரசேத மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் உள்ள கதிரியில் வாஷிங் மெஷினில் இருந்து வெளியேறும் கழிவுநீரில் இரண்டு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பத்மாவதி என்ற பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று(டிசம்பர் 5) நடந்துள்ளது. கதிரியில் உள்ள மாசாணம்பேட்டையில் பத்மாவதி என்ற பெண் வசித்து வந்தார். இவரது வீட்டில் இருக்கும் வாஷிங் மிஷினின் கழிவுநீர் பக்கத்து வீட்டில் உள்ள வேமண்ணா நாயக்கின் நிலம் வழியாக சென்றுள்ளது.
இதனால், இவருக்கும் வேமண்ணா நாயக்கின் குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் தகராறாக மாறி பத்மாவதியை வேமண்ணா நாயக்கின் குடும்பத்தினர் கற்களால் தாக்கினர். இந்த தாக்குதலால் தலையில் பலத்த காயமடைந்த பத்மாவதி ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார்.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் பத்மாவதியை மீட்டு உள்ளூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால், மேல் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (டிசம்பர் 6) உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த கதிரி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சோசியல் மீடியாவில் காதல்... காதலியை கழுத்து அறுத்துக்கொன்ற கொடூர ஐடி பணியாளர்